சென்னை, : நிலங்களுக்கான திருத்தப்பட்ட புதிய வழிகாட்டி மதிப்புகள், நேற்று முதல் அமலுக்கு வந்தன. இணையதளம் முடங்கியதால், புதிய மதிப்புகளை அறிய முடியாமல் மக்கள் அவதியுற்றனர். தமிழகத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகள், 2012ல் மாற்றப்பட்டன. இவற்றில், 33 சதவீதம் குறைக்கும் உத்தரவு, 2017ல் பிறப்பிக்கப்பட்டது. திடீரென, 2012ல் வெளியான மதிப்புகளே மீண்டும் பின்பற்றப்படும் என, கடந்த ஆண்டில் பதிவுத்துறை அறிவித்தது. இதற்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பை சமாளிக்கும் வகையில், நடைமுறையில் உள்ள வழிகாட்டி மதிப்புகளில் திருத்தம் செய்ய அரசு முடிவு செய்தது. இதன்படி, வழிகாட்டி மதிப்புகளை, 10 சதவீதம் அளவுக்கு உயர்த்தி, கடந்த மாதம் வரைவு மதிப்புகள் வெளியிடப்பட்டன. இது குறித்து கருத்து தெரிவிக்க, ஜூன் 30 வரை அவகாசம் வழங்கப்பட்டது. அவகாசம் முடிந்த நிலையில், திருத்தப்பட்ட புதிய வழிகாட்டி மதிப்புகள் நேற்று அமலுக்கு வந்தன; அத்துடன், பதிவுத்துறை இணையதளத்திலும் வெளியாகின. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பதிவுத்துறை இணையதளம் முடங்கியதால், புதிய வழிகாட்டி மதிப்புகளை அறிய முடியவில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனால், பத்திரப்பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.கட்டணம் குறைப்பு?சந்தை நிலவரத்துக்கு ஏற்ப நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, உரிய கால இடைவெளியில் மாற்றுவது அவசியம். இவ்வாறு மதிப்புகளை திருத்தும் நடைமுறை, குழப்பம் ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். தற்போது, 10 சதவீதம் வரை வழிகாட்டி மதிப்புகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனால், நிலங்களின் விலை உயரும். ஆனால், வழிகாட்டி மதிப்புகளை உயர்த்தும் நிலையில், பதிவு கட்டணங்களை, 2 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைக்க வேண்டும். அப்போது தான் வீடு, மனை வாங்குவோர் கூடுதல் செலவை சமாளிக்க முடியும். - பி.பாலமுருகன்ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்
விழுப்புரத்துக்கு விலக்கு!
பதிவுத்துறை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை நிர்ணயித்தல், வெளியிடுதல், திருத்தம் மேற்கொள்ளுதல் பணிகளுக்கான விதிகள், 2010ல் வகுக்கப்பட்டன. இதன்படி, ஆண்டுதோறும் வழிகாட்டி மதிப்புகளை சீரமைக்க வேண்டும். இந்த புதிய விதிகளின் அடிப்படையில், வழிகாட்டி மதிப்புகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் சீரமைக்கப்பட்ட புதிய வழிகாட்டி மதிப்புகளை, நேற்று முதல் அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடப்பதால், விழுப்புரம் மாவட்டத்துக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் தவிர்த்து, அனைத்து மாவட்டங்களுக்கான புதிய மதிப்புகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.