| ADDED : ஜூலை 30, 2024 11:18 PM
சென்னை:'வாழ்வாதாரம் மற்றும் தொழிலாளர் கோரிக்கைகளை முன் வைத்து போராடுவோரை கைது செய்வது நியாயமல்ல' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழுக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். நிவாரண பணிகளுக்கு கட்சி சார்பில், 10 லட்சம் ரூபாய் அனுப்பி வைக்கப்படும்.மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் பணி செய்யும் ஊழியர்கள், சென்னையில் பேரணி நடத்தி, அரசிடம் முறையீடு செய்ய, அவரவர் ஊரில் இருந்து புறப்பட்ட, 15,000 பெண் ஊழியர்களை போலீஸ் துறை தடுத்து நிறுத்தி உள்ளது. பெண்களை குற்றவாளிகளை போல் போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களின் இயற்கை தேவை குறித்து கவலை கொள்ளாமலும், மனித உரிமையை அவமதித்து கைது செய்தது கண்டிக்கத்தக்கது. போலீஸ் துறையினரின் இந்த அத்துமீறலையும், மனித உரிமை மீறலையும் கண்டிக்கத்தக்கது.ஏற்கனவே, ஆசிரியர் போராட்டங்களில் ஈடுப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது மக்களை தேடி மருத்துவ ஊழியர்களும் கைது செய்து தடுக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பேரணி நடத்துவது, ஒன்று கூடுவது அமைச்சர்களை சந்தித்து பேசுவது போன்றவற்றைக் குற்றமாக கருதி, முன்னெச்சரிக்கை என்ற பெயரில் கைது செய்யும் போக்கை மாநில அரசு மேற்கொள்ளக் கூடாது.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.