உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பி.பி.ஏ. - பி.சி.ஏ., படிப்பு ஏ.ஐ.சி.டி.இ., எச்சரிக்கை

பி.பி.ஏ. - பி.சி.ஏ., படிப்பு ஏ.ஐ.சி.டி.இ., எச்சரிக்கை

சென்னை:ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகரித்த கல்வி நிறுவனங்களில் மட்டுமே, பி.பி.ஏ., - பி.சி.ஏ., படிப்பில் சேர வேண்டும் என, மாணவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., சார்பில், இன்ஜினியரிங், மேலாண்மை போன்ற தொழில்நுட்ப படிப்புகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தன. அதேநேரம், பி.சி.ஏ., --- பி.பி.ஏ., -- பி.எம்.எஸ்., போன்ற தொழில்நுட்ப படிப்புகள், அந்தந்த பல்கலைகளால் அங்கீகரிக்கப்பட்டு, கலை, அறிவியல் படிப்புகளாக இருந்தன. இந்நிலையில், புதிய கல்விக்கொள்கை அமலானதும், அனைத்து தொழில்நுட்ப பட்டப் படிப்புகளுக்கும், ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற வேண்டும் என, மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதற்காக, மூன்று மாதங்களாக விண்ணப்பங்கள் பெற்று, அங்கீகாரம் வழங்கும் பணி நடந்து வந்தது.இந்நிலையில், ஏ.ஐ.சி.டி.இ., உறுப்பினர் செயலர் ராஜிவ் குமார் வெளியிட்ட அறிவிப்பு:வரும், 2024 - 25ம் கல்வி ஆண்டில் இருந்து, பி.சி.ஏ., - பி.பி.ஏ., மற்றும் பி.எம்.எஸ்., தொழில்நுட்ப படிப்புகளுக்கு, அங்கீகாரம் பெறுவது கட்டாயமாகியுள்ளது. இதுவரை, 4,200 கல்வி நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்றுள்ளன.ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரத்துடன் நடத்தப்படும், பி.சி.ஏ., - பி.பி.ஏ., மற்றும் பி.எம்.எஸ்., தொழில்நுட்ப படிப்புகளில் சேரும், 3,000 மாணவியருக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஐ.சி.டி.இ.,யின் பல்வேறு தொழில்நுட்ப படிப்புகளுக்கான அடல் ஆய்வகம், தொழில் பழகுனர் பயிற்சி, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் மாணவர்களுக்கு கிடைக்கும்.எனவே, மாணவ, மாணவியர் விழிப்புணர்வுடன் இருந்து, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் மட்டுமே, பி.சி.ஏ., - பி.பி.ஏ., மற்றும் பி.எம்.எஸ்., ஆகிய தொழில்நுட்ப படிப்புகளில் சேர கேட்டு கொள்ளப்படுகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்