இரு மதத்தினருக்கு இடையே மோதல் ஏற்படுத்தும்படியான பேச்சுக்காக, தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன் மீது, நாகூர் போலீசார் வழக்கு பதிந்தனர். ஜாமின் கேட்டு அவர், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, 'இரு மதங்களுக்கு இடையே, பிரச்னையை துாண்டும் வகையில் இனி பேச மாட்டேன் என, விசாரணை நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்' என்ற நிபந்தனை விதித்து, ஜாமின் வழங்கினார்.அதை ஏற்க மறுத்த அஸ்வத்தமான், தீர்ப்பில் உள்ள நிபந்தனையை திரும்ப பெற வேண்டும் எனக் கேட்டு, மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது: கடந்த 1995ல், ஆர்.டி.எக்ஸ்., வெடிகுண்டை, நாகூர் ஹிந்து அமைப்பின் நிர்வாகியாக இருந்த தங்க முத்துக்கிருஷ்ணனுக்கு, முஸ்லிம் தீவிரவதி அபுபக்கர் பார்சல் வாயிலாக அனுப்பி உள்ளார். பார்சலை வாங்கி பிரித்தபோது குண்டு வெடித்ததில், தங்க முத்துக்கிருஷ்ணனின் மனைவி தங்கம் அம்மாள் இறந்தார்.இதையடுத்து, ஒவ்வொரு ஜூலை மாதமும், நாகூரில் தங்கம் அம்மாளின் நினைவு நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும், அதே போல நடத்த முயற்சி நடந்தது. போலீசார் அனுமதி மறுத்ததால், உயர் நீதிமன்றத்தை நாடினர். பின், அனுமதியுடன் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்வில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சார்பில், நான் பங்கேற்றேன்.'வெடிகுண்டை பார்சலில் அனுப்பி தங்கம் அம்மாள் இறப்புக்கு காரணமான, முஸ்லிம் தீவிரவாதி அபுபக்கரை, 24 ஆண்டுகளாக போலீஸ் பிடிக்கவில்லை. இது தான் போலீஸ் விசாரணை லட்சணம். அனைத்து முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக சித்தரிப்பது தி.மு.க.,தான்' என பேசினேன். இந்த பேச்சுக்காக, இரு மதங்களுக்கு இடையே பிரச்னையை துாண்டும் வகையில் பேசியதாக, போலீசார் வழக்கு போட்டுள்ளனர். ஆனால், அதற்கான எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை; ஜாமின் மனு மீதான விசாரணையின்போதும் தெரிவிக்கவில்லை.அரசு தரப்பு கேட்டுக் கொண்டதால், 'இனிமேல் மத மோதலுக்கு வித்திடும்படியாக பேச மாட்டேன் என, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மன்னிப்பு கோர வேண்டும்' என, உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி தீர்ப்பளித்துள்ளார். வழக்கு விசாரணையே நடக்கவில்லை; அதற்குள் எப்படி மன்னிப்பு கோர முடியும். அதுவும் மத மோதலுக்கு வித்திடும்படியாக பேச மாட்டேன் என, பிரமாண பத்திரம் எப்படி தாக்கல் செய்ய முடியும்; அப்படி பத்திரம் தாக்கல் செய்தால், நானே தவறை ஒப்புக் கொண்டதாவிடும். அப்புறம் எப்படி வழக்கு பொய்யானது என வாதிட முடியும்.வழக்கு விசாரணை துவங்கும் முன், எனக்கு நீதிமன்றம் எப்படி தண்டனை தர முடியும். மன்னிப்பு என்பதும் தண்டனை வகையில் சேர்ந்ததுதான். அதனால், அதை ஏற்க முடியாது. தீர்ப்பை மாற்றிக் கொடுங்கள் எனக் கேட்டு, மனு தாக்கல் செய்துள்ளேன். இவ்வாறு அஸ்வத்தாமன் கூறினார். - நமது நிருபர் -