சென்னை : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கை விசாரித்து முடிக்க, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு, கூடுதலாக 4 மாத அவகாசத்தை, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கி உள்ளது.சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு ஜூனில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.இவ்வழக்கில், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை, அமலாக்கத் துறை தாக்கல் செய்தது. இதையடுத்து, ஜாமின் கோரி, உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கை, மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கும்படி, கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணையை முடிக்க, கூடுதலாக 4 மாதங்கள் அவகாசம் அளிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்துக்கு, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் கடிதம் அனுப்பியது.அதன் அடிப்படையில், நீதிபதி ஜெயச்சந்திரன் முன், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 'வழக்கு விசாரணையை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்கும்படி, விசாரணை நீதிமன்றங்களுக்கு காலவரம்பு நிர்ணயிக்கக் கூடாது என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது' என, செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதற்கு, உச்ச நீதிமன்ற உத்தரவை மதிப்பதாக தெரிவித்த நீதிபதி, 'மனுவுக்கு மேல் மனு தாக்கல் செய்யாமல் விசாரணையை முடிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்றார்.நான்கு மாத அவகாசம் கோரி, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி கடிதம் அனுப்பி இருப்பதால், அந்த அவகாசத்தை வழங்குவதாகவும், அதற்குள் விசாரணையை முடிக்கும்படியும், நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.