கோஷ்டி பூசல் காரணமாக தி.மு.க., மாணவரணியில் மாற்றம்
சென்னை:கோஷ்டி பூசல் காரணமாக, தி.மு.க., மாணவரணியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மாணவரணி செயலராக இருந்த எழிலரசன் எம்.எல்.ஏ., அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப் பட்டு, கொள்கை பரப்பு செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். மாணவரணி தலைவராக இருந்த ராஜிவ்காந்தி, புதிய செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார். மாணவரணி இணைச் செயலர் ஜெரால்டு, அதில் இருந்து மாற்றப்பட்டு, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றொரு இணைச் செயலர் மோகன், வர்த்தகர் அணி துணைத் தலைரவாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை, அக்கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.திடீர் மாற்றம் குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:நாம் தமிழர் கட்சி இளைஞரணி செயலராக இருந்த ராஜிவ்காந்தி, தி.மு.க.,வில் சேர்ந்ததும், அவருக்கு இரு ஆண்டுகளுக்கு முன் மாணவரணி தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதனால், மாணவரணியில் எழிலரசன், ராஜிவ்காந்தி இடையே பூசல் ஏற்பட்டது. மாவட்ட ரீதியாக, இருவரும் ஆதரவு கோஷ்டிகளை வளர்த்தனர்.நாம் தமிழர் கட்சியில் இருந்து, 3 ஆயிரம் பேரை அழைத்து வந்து, முதல்வர் முன்னிலையில் தி.மு.க.,வில் சேர்த்தார் ராஜிவ்காந்தி. இதன் வாயிலாக, கட்சி மேலிடத்தில் செல்வாக்கு கிடைத்தது. ஆனால், மாணவரணி செயலராக இருந்த எழிலரசன், இவரை ஏற்கவில்லை.அதிருப்தியில் இருந்த ராஜிவ்காந்தி, டில்லியில் எழிலரசன் தலைமையில் நடந்த போராட்டத்தை புறக்கணித்தார். இதற்கிடையில், மும்மொழிக் கொள்கை விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக, மாணவர் அணி தீவிரமாக செயல்படவில்லை என்ற புகார் எழுந்தது. அதன் காரணமாகவே, எழிலரசன் மாற்றப்பட்டு, ராஜிவ்காந்தி நியமிக்கப்பட்டு உள்ளார்.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.