| ADDED : ஜூலை 09, 2024 12:15 AM
சென்னை : புதிய கடலோர மேலாண்மை திட்ட வரைபடம் தயார் நிலையில் இருப்பதாக, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.'மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், புதிய கடலோர மண்டல மேலாண்மை திட்டம் உள்ளது. திட்ட வரைவு அனைத்து அம்சங்களிலும் முழுமையாக இல்லை.இது மீனவர்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அதை ரத்து செய்ய வேண்டும்' என, ஜேசுரெத்தினம் என்பவர், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார்.அதை விசாரித்த தீர்ப்பாயம், அனைத்து அம்சங்களிலும், முழுமையான வரைவு திட்டத்தை, பொது வெளியில் வெளியிட்ட பின், கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்த உத்தரவிட்டது.இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யநாராயணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் சார்பில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த பொது மக்கள் கருத்துக் கேட்பு கூட்டங்களுக்கு, 2023 ஆக., 18ல் தீர்ப்பாயம் தடை விதித்தது.மனுதாரர் உள்ளிட்ட பலரால் சுட்டிக்காட்டப்பட்ட அனைத்து அம்சங்களும் தற்போது சரிசெய்யப்பட்டு, வரைவு அறிவிப்பு கிட்டத்தட்ட தயாராக உள்ளது என்று, கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திற்காக ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, ஆணையம் இரண்டு வாரம் அவகாசம் கோரியுள்ளது. அதன்பின், புதிய கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைவு வரைபடத்தை ஆணையம் வெளியிடலாம்.மக்கள் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தலாம். வழக்கின் அடுத்த விசாரணை, வரும் 23ல் நடக்கும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.