சென்னை : கருணை அடிப்படையில், சத்துணவு அமைப்பாளர் பணியை வழங்கும்படி பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தவில்லை என தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பதிலளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் உள்ள பால்வார்த்து வென்றான் கிராமத்தைச் சேர்ந்தவர் அமுதா. சத்துணவு அமைப்பாளரான இவர், 2017 ஆக., 8ல் பணியில் இருந்த போது உயிரிழந்தார்.கருணை அடிப்படையில், 2021 ஆக., 9ல், அமுதாவின் மகள் கோமதிக்கு சமையலர் பணி வழங்கப்பட்டது. இருப்பினும், சத்துணவு அமைப்பாளர் பணி கோரி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு கோமதி கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோமதி வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'போளூர் தாலுகாவில் உள்ள காலி பணியிடத்தில், எட்டு வாரத்துக்குள் கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளராக, கோமதியை நியமிக்க வேண்டும்' என்று, மாவட்ட கலெக்டருக்கு கடந்தாண்டு அக்., 31ல் உத்தரவிட்டது.இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தனக்கு பணி வழங்காத திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி, கோமதி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.தமிழ் செல்வன், ''நீதிமன்ற உத்தரவுப்படி வேலை வழங்கக்கோரி, மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தும், சத்துணவு அமைப்பாளர் பணியை வழங்கவில்லை. நீதிமன்ற உத்தரவை மதிக்காத, சம்பந்தப்பட்ட கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.இதையடுத்து, இந்த மனு குறித்து மாவட்ட கலெக்டர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 14க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.