| ADDED : ஆக 15, 2024 07:52 PM
திருப்பூர்:'ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதை போலீஸ் அதிகாரிகள் மறைக்க முற்பட்டுள்ளனர்' என, ஹிந்து முன்னணி மாநில பொதுச்செயலர் கிஷோர்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை:சில நாட்கள் முன், பழநியிலுள்ள பா.ஜ., அலுவலகத்துக்கு ஒரு பதிவு தபால் வந்தது. அதில், சிலர் பங்கரவாத பயிற்சி எடுப்பதாகவும், முஸ்லிம் அமைப்பைச் சேர்ந்த பத்து பேருக்கு பயிற்சி கொடுத்து, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.இதையடுத்து, போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை விசாரித்த போலீஸ் அதிகாரிகள், உண்மையை மறைக்க முற்பட்டுள்ளனர். கடிதத்தில் சொல்லப்பட்டிருக்கும் தகவல் உண்மை அல்ல; வெற்று மிரட்டலுக்காக மட்டும் எழுதி உள்ளனர் என, பிரச்னையின் தீவிரத்தை நீர்த்துப் போக செய்துள்ளனர்.சம்பந்தப்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தவில்லை. அது துரதிர்ஷ்டவசமானது.இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் காரணமாக, தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. அதை தமிழக அரசு உணரவில்லை. ஹிந்துக்களின் பாதுகாவலராக விளங்கும், மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் மீது தாக்கல் நடத்த திட்டமிடுவோர் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் மறைப்பது சரியல்ல; கண்டிக்கத்தக்கது. இந்தப் பிரச்னையை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.