| ADDED : ஜூன் 21, 2024 12:54 AM
மதுரை:திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி வழக்கறிஞர் முத்துகுமார். இவரை ஒரு கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியதில் காயமடைந்தார். திண்டுக்கல் டவுன் தெற்கு போலீசார் வழக்கு பதிந்தனர்.இவ்வழக்கில் சிலர் முன்ஜாமின் கோரி மனு செய்தனர். நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.முத்துகுமார் தரப்பு: சம்பவம் திட்டமிட்டு நடந்துள்ளது. வழக்கில் தொடர்புடையவர்கள் திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக மது விற்பனையில், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. முன்ஜாமின் வழங்கக்கூடாது.இவ்வாறு தெரிவித்து, சட்டவிரோத மது விற்பனை தொடர்பான வீடியோ பதிவு, நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டது. நீதிபதி: மாவட்டத்திற்கு தலைநகராக உள்ள திண்டுக்கல்லில் இதுபோன்ற செயல்களை போலீசார் எப்படி அனுமதிக்கின்றனர்.இதுபோல, போலீசார் அலட்சிய மனப்பான்மையுடன் நடந்து கொண்டதால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதில் பலர் இறந்து உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் மேலும் தொடர அனுமதிக்க வேண்டுமா?திண்டுக்கல்லில் சட்டவிரோத மது விற்பனையை மக்கள் வீடியோ எடுத்துள்ளனர். இதன் பின்பும் போலீசார் கண்டு கொள்ளாதது வேதனையாக உள்ளது; அதிருப்தியளிக்கிறது.அரசு தரப்பு: வழக்கில் தொடர்புடையவர்கள், அவர்களுக்கு துணைபோன போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவர்.இவ்வாறு விவாதம் நடந்தது.நீதிபதி: போலீஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.