கிருஷ்ணகிரி:''எங்களை விமர்சிக்க, தி.மு.க.,வினருக்கோ, ஸ்டாலினுக்கோ அருகதை இல்லை,'' என, ராஜ்யசபா, அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை கூறினார்.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் அவர் அளித்த பேட்டி: எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிப்பதோ, நுாற்றாண்டு விழாவையோ, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சிறப்பாக செய்யவில்லை என, முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பிரதமரை பங்கேற்க வைக்கவில்லை என, கூறுகின்றனர். நானும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உட்பட சிலர் மத்திய அரசு சார்பில் கலந்து கொள்ள, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவுக்கு அழைத்தும், அது நடக்கவில்லை. ஆனால், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை மாவட்டந்தோறும் சிறப்பாக நடத்தினோம். விழா தினத்தன்று காலையில், மாணவர்களுக்கான கருத்தரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதை பொறுக்க முடியாமல் நீதிமன்றம் சென்று, பல மாவட்டங்களில் நடத்த விடாமல் தடுத்தது தி.மு.க.,தான். அதேபோல், ஜெயலலிதா நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்திற்கு சென்றது தி.மு.க.,தான். எங்களை விமர்சிக்க, முதல்வர் ஸ்டாலினுக்கோ, தி.மு.க.,வினருக்கோ அருகதை இல்லை. தி.மு.க.,வை தோற்றுவித்த அண்ணாதுரை நுாற்றாண்டு விழாவை, தி.மு.க., சிறப்பாக கொண்டாடியதா என்பதை முதலில் கூறட்டும்.நடிகர் விஜய் மட்டுமல்ல, விஷால் கூட கட்சி ஆரம்பிப்பதாக கூறியுள்ளார். யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால், ஆளுங்கட்சியினர் ஓட்டுகள் தான் உடையும். தி.மு.க.,வினருக்கு தற்போது பா.ஜ., தயவு தேவைப்படுகிறது என்பதற்காக, அ.தி.மு.க.,வை விமர்சிப்பது தவறு. தற்போது பிரதமர் மோடியை அவர்கள் அழைத்து வந்து, கருணாநிதி நுாற்றாண்டு விழா நாணயம் வெளியிட்டிருக்கலாமே. அதை விடுத்து, முதல்வருக்கு சமமான, கேபினட் அமைச்சர் ராஜ்நாத்சிங்கை அழைத்து வந்துள்ளனர். ஒரு எதிர்க்கட்சி தலைவர், கூட்டணியில் உள்ள ராகுலுக்கு அழைப்பு விடுக்கவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.