| ADDED : மே 08, 2024 12:17 AM
சென்னை:சென்னை மாநகராட்சியிடம் நாய்கள் வளர்ப்பதற்கு உரிமம் பெற்றிருந்தால் மட்டுமே, பூங்காவிற்குள் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு:சென்னை மாநகராட்சி பூங்காக்களில் பாதுகாப்புகள் கடுமையாக்கப்படும். ஒவ்வொரு செல்லப்பிராணி உரிமையாளரும், ஒரு நாயை மட்டுமே அழைத்து செல்வது உறுதி செய்யப்படும்.பூங்காவிற்கு அனுமதிக்கப்படும் அந்நாய் கயிறுகள் வாயிலாக கட்டப்பட்டு, வாய் பகுதி மூடப்பட்டிருக்க வேண்டும். நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்படும்.மேலும், செல்ல பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயம். பூங்காவிற்குள், உரிமங்கள் சரிபார்க்கப்பட்ட பின் தான் நாய்கள் உள்ளே அனுமதிக்கப்படும்.கட்டவிழ்த்து விடப்பட்ட நாய்கள் பூங்காவிற்குள் அனுமதிக்கப்படாது. அதேபோல, குழந்தைகள் விளையாடும் பகுதியிலும் நாய்கள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது.வெறித்தனமான நாய்களை வளர்க்கும் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து செல்ல பிராணிகளுக்கும் துணை தேவை. ஆனால், சரியான உரிமம் பெற்று, இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்ய வேண்டும்.கால்நடை டாக்டர்களின் அறிவுறுத்தல்படி நாய்களை பராமரிப்பதுடன், அதற்கு இருப்பிடம், தண்ணீர் போன்றவற்றை வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.