சென்னை:தங்களுக்கு சாதகமான தொகுதிகளில் மட்டும் ஏராளமான வாக்காளர்களின் பெயர் காணாமல் போனது எப்படி என்று தமிழக பாரதிய ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது.ஓட்டளிக்க ஆர்வமாக சாவடிக்கு வந்த பலர், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஓட்டு போடாமல் திரும்பினர். வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் பலன் இல்லை என ஏமாற்றம் தெரிவித்தனர். சென்னை சைதாப்பேட்டையில் அப்படி ஏமாந்த 500 பேர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். லண்டனில் இருந்து வந்த சூளைமேடு பால்ராஜ், மஸ்கட்டில் இருந்து வந்த கோவை ராம் நகர் சுரேஷ் மனைவி ரேகா பெயர் இல்லாததால் அதிர்ச்சி அடைந்து புகார் அளித்தனர்.துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தின்னஹள்ளி, கிருஷ்ணகிரி பூந்தோட்டம் என பல ஊர்களிலுமாக இதுபோல் ஆயிரக்கணக்கான பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தன. கடந்த லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் ஓட்டளித்த நிலையில், இப்போது மட்டும் பெயர்கள் இல்லாமல் போனது எப்படி என அவர்கள் கோபத்துடன் கேட்டனர். இந்த தகவல்களை சேகரித்து தொகுத்துள்ள பா.ஜ., நிர்வாகிகள், பெயர் நீக்கத்தில் ஒரு ஒற்றுமை தெரிவதாக கூறினர்.அதாவது, பா.ஜ., ஆதரவாளர்கள் என அறியப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் மாயமாகி உள்ளன. இவ்வாறு ஒரு சாவடிக்கு குறைந்தபட்சம் 100 பேர் நீக்கப்பட்டுள்ளனர் என வடசென்னை தொகுதி பா.ஜ., வேட்பாளர் பால் கனகராஜ் கூறினார். ''இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், யாருமே பொறுப்பான பதில் அளிக்கவில்லை. புகார் கொடுத்தால் வாங்க மறுக்கின்றனர். வட மாநிலத்தவர் அதிகம் வாழும் என் தொகுதியில் மட்டும் 1.45 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. எனவே, இது திட்டமிட்ட சதி,” என்றார் அவர். யாருடைய சதி என கேட்டதற்கு, ஊருக்கே தெரியும் என அவர் பதில் அளித்தார். தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ''என் கோவை தொகுதியில் ஒவ்வொரு சாவடியிலும் 20 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. ஒரு வீட்டில் இறந்த கணவன் பெயர் உள்ளது. ''ஆனால், உயிருடன் உள்ள மனைவி பெயர் இல்லை. ஒரு சாவடியில் 830 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. எனவே, இது திட்டமிட்ட சதி என்பதில் சந்தேகம் இல்லை,'' என்றார்.
'பூத் கமிட்டி' என்னாச்சு?
தமிழகத்தில் பா.ஜ., அமைப்பு ரீதியாக 66 மாவட்டங்களாகவும், எட்டு பெருங்கோட்டங்களாகவும் செயல்படுகிறது. மாநிலத்தில் 68,000 ஓட்டுச் சாவடிகள் உள்ளன. ஒரு சாவடிக்கு ஒரு பூத் கமிட்டி அமைத்துள்ளதாக கூறினர். ஐந்து பூத் கமிட்டிக்கு ஒரு பொறுப்பாளர் நியமித்து அவருக்கு சக்தி கேந்திரா பொறுப்பாளர் என பெயரும் சூட்டினர். தமிழகம் வந்த பிரதமர் மோடி, இந்த பூத் கமிட்டி குறித்து தான் நிர்வாகிகளிடம் விசாரித்தார். அவருக்கு திருப்தியான பதில் கூறிவிட்டனர். ஆனால், தேர்தல் நாளில் விஷயம் வெளியே வந்து விட்டது. தமிழகத்தில் 62,000 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு விட்டதாக சொன்ன தகவல் உண்மை அல்ல என்று அம்பலமாகி விட்டது. வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பதுதான் பூத் கமிட்டியின் பிரதான வேலை. கமிட்டி இருந்தால் தானே அந்த வேலை நடக்கும்? பெயர் நீக்கத்தில் மாநில ஆளும் கட்சிக்கு பங்கிருக்கிறது என்ற குற்றச்சாட்டு உண்மை என வைத்துக் கொண்டாலும், அதை முதலிலேயே கண்டுபிடித்து சரி செய்திருக்க வேண்டிய பொறுப்பு உள்ளூர் பா.ஜ., நிர்வாகிகளுக்கு உண்டு.“சீட் வாங்கவும், மத்திய அமைச்சர்களை சுற்றி வருவதிலும் நேரத்தை செலவிட்டால் இந்த வேலைக்கு எப்படி நேரம் கிட்டும்?” என்று குமுறினார் ஒரு நீண்டகால பா.ஜ., அனுதாபி.