இரவு நேர பறவைகளை தேடும் வனத்துறை; கணக்கெடுப்பில் புதிய அணுகுமுறை
சென்னை: ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பில், முதல் முறையாக இரவு நேர பறவைகள் குறித்த விபரங்களை திரட்டும் பணியை, தமிழக வனத்துறை மேற்கொண்டு உள்ளது.தமிழகத்தில் ஆண்டுதோறும், ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும். கடந்த சில ஆண்டுகளாக, முதல் கட்டத்தில் நீர் பறவைகள், இரண்டாம் கட்டத்தில் நில பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.அந்த வகையில் நடப்பு ஆண்டில், நீர் பறவைகள் கணக்கெடுப்பு தமிழகம் முழுதும் நேற்று நடந்தது. சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம், நாகப்பட்டினம் கோடியக்கரை உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது. இதில், வனத்துறையினர், பறவை ஆர்வலர்கள் என, 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கணக்கெடுப்பு விபரங்கள், மாவட்ட வன அலுவலர்கள் வாயிலாக திரட்டப்பட்டு வருகின்றன.தமிழக அளவில் தொகுக்கப்பட்டு, வனத்துறை தலைமையகம் வாயிலாக கணக்கெடுப்பு விபரங்கள் வெளியிடப்படும் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.இதில், புதிய முறையாக நடப்பு ஆண்டில், இரவு நேர பறவைகள் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பொதுவாக பகல் நேரத்தில் தான், பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும்.ஆனால், குறிப்பிட்ட சில வகை பறவைகள் இரவில் மட்டுமே காணப்படும் என்பதால், அதுகுறித்த விபரங்களை திரட்டவும் வனத்துறை முடிவு செய்தது.இதன்படி, கணக்கெடுப்பின் முதல் நாளான நேற்று முன்தினம், தமிழகம் முழுதும், இரவு நேர பறவைகள் குறித்த விபரங்கள் திரட்டப்பட்டன. பல்வேறு நடைமுறை பிரச்னைகள் இருந்தாலும், இந்த புதிய முயற்சிக்கு ஆர்வலர்களிடம் ஆதரவு கிடைத்துள்ளது.தமிழகத்தில் புள்ளி ஆந்தை, கூகை ஆந்தை, கிழக்கத்திய சிறிய ஆந்தை, சிறிய நாட்டு ஆந்தை, பழுப்புநிற காட்டு ஆந்தை, பழுப்பு 'பாறு' ஆந்தை, சிறு பக்கி, ரா கொக்கு, பட்டை கழுத்து சிறிய ஆந்தை போன்றவை இரவு நேரத்தில் காணப்படுகின்றன.தமிழக வனத்துறையின் கணக்கெடுப்பு முயற்சியால், இவ்வகை பறவைகளின் எண்ணிக்கை விபரங்களை, ஆவணப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என, பறவை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து, வரும் 15ம் தேதி இரவு, பறவைகள் கணகெடுப்பு மீண்டும் மேற்கொள்ளப்படும். அதற்கு அடுத்த நாள் சமவெளி பறவைகள் கணக்கெடுப்பு நடக்கும் என, வனத்துறை அறிவித்துள்ளது.