சென்னையில் பார்முலா - 4 கார் பந்தயம்: நிபந்தனைகளுடன் அனுமதி
சென்னை:சென்னையில், நாளை துவங்க உள்ள 'பார்முலா - 4' கார் பந்தயத்திற்கு நிபந்தனை விதித்து, உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத் தாக்கல் செய்த மனு:சென்னையில் பார்முலா-4 கார் பந்தயம், ஆக., 31, செப்.1ம் தேதிகளில் நடக்க உள்ளது. பொது சாலையில் நடக்கும் இந்த பந்தயத்திற்கு, மாநில அரசு அனுமதி வழங்கியிருக்கக் கூடாது. பொது சாலையில் பந்தயம் நடக்க, பந்தய கார்களுக்கு அனுமதி வழங்கினால், மோட்டார் வாகன சட்டத்தின் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். பந்தய கார்களில் சாலை பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.சாலையில் பந்தயம் நடத்துவதற்கு, தற்காலிகமாக சாலையை மூடுவதற்கு அனுமதி வழங்க, மாநகராட்சிக்கு அதிகாரம் இல்லை. பொதுமக்களின் நலன்களை காக்க வேண்டிய பொறுப்பு, அரசுக்கு உள்ளது; ஆனால், பந்தயம் நடத்தும் நிறுவனத்துடன் அரசும் கைகோர்த்து உள்ளது. பந்தயம் நடக்கும் போது, அண்ணாசாலை, சிவானந்தா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில், போக்குவரத்து பாதிக்கப்படும்.பந்தயம் நடத்த மாநகராட்சி அனுமதி வழங்குவது, சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டத்திற்கு முரணானது.பந்தய பாதையானது, ஓட்டுவதற்கு தகுதியற்றதாக உள்ளது. பந்தயத்தை நடத்த, அவசர கதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, கார் பந்தயத்திற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆகியோர் ஆஜராகினர்.மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, ''குறிப்பிட்ட சாலைகளில் பந்தயம் நடத்த, அறிவிப்பாணை பிறப்பிக்கப்படவில்லை. வாகனங்கள் பதிவுக்கு விலக்கு அளிக்க, மோட்டார் வாகன விதிகளில் அதிகாரம் வழங்கப்பட்டாலும், பொது நலன் இருந்தால் மட்டுமே விலக்கு அளிக்கப்பட வேண்டும்.குறிப்பிட்ட சாலைகளில் பந்தயம் நடத்துவது, பொது நலனுக்கு உகந்தது அல்ல. எப்.ஐ.ஏ., எனப்படும் சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பிற்கு, பந்தயம் நடத்துவதற்கான உரிமம் வழங்க தகுதி உள்ளது,'' என்றார்.அரசு தரப்பில் ஆஜரான, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''பந்தயம் துவங்கும் நாளில், மதியம் 12:00 மணிக்கு முன், நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதை எப்.ஐ.ஏ., ஆய்வு செய்த பின், சான்றிதழ் வழங்குவர். அதன் அடிப்படையில் மட்டுமே, பந்தய நிகழ்ச்சி நடக்கும். பந்தயம் நடத்த, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க, மாநகராட்சி ஆணையருக்கு அதிகாரம் உள்ளது; அறிவிப்பாணை தேவையில்லை. தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை, அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்,'' என்றார்.இரு தரப்பு வாதங்களுக்குப் பின், முதல் அமர்வு பிறப்பித்த உத்தரவு:பந்தயத்தில் பங்கேற்கும் கார்களுக்கு, உள்துறை ஒப்புதல் வழங்கி உள்ளது. பார்முலா பந்தயத்திற்கான விதிகளின்படி நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு, இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பந்தயம் நடப்பதற்கு முன், எப்.ஐ.ஏ.,யிடம் இருந்து சான்றிதழ் பெறுவதை, அட்வகேட் ஜெனரலும் ஏற்றுக் கொண்டுள்ளார். எனவே, கீழ்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறோம்.* அரசு தரப்பில் அளித்த உத்தரவாதத்தின்படி, நாளை மற்றும் செப். 1ம் தேதி, பார்முலா-4 கார் பந்தயத்தை, அரசு நிர்ணயிக்கும் அட்டவணைப்படி நடத்திக் கொள்ள வேண்டும். ஆக., 31ம் தேதி மதியம் 12:00 மணிக்கு முன், எப்.ஐ.ஏ., சான்றிதழ் பெறப்பட வேண்டும். அதை, மனுதாரரின் வழக்கறிஞருக்கு இ - மெயில் வாயிலாக தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் எப்.ஐ.ஏ., சான்றிதழ் பெற தவறினால், கார் பந்தயத்தை நடத்தக் கூடாது.* போக்குவரத்து போலீஸ் துணை ஆணையர் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குனர் அளித்த உத்தரவாதத்தின்படி, திருப்பி விடப்பட்ட பாதைகளில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இருப்பதையும், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கும், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பொது மக்களுக்கும் அசவுகரியம் ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு முதல் அமர்வு உத்தரவிட்டுள்ளது.மனுவுக்கு, அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, இறுதி விசாரணையை ஆறு வாரங்களுக்கு, முதல் அமர்வு தள்ளி வைத்தது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இந்தியாவின் முதல் 'ஆன்-ஸ்ட்ரீட் பார்முலா 4' பந்தயம், ஆக. 31, செப்., 1ம் தேதி, தீவுத்திடல் சுற்றியுள்ள சாலைகளில் நடைபெற உள்ளது.இதை முன்னிட்டு, ஆக. 30ம் தேதி முதல், செப்., 1ம் தேதி வரை, மதியம் 12:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை போட்டி நடைபெற உள்ளதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.* காமராஜர் சாலை வழியாக போர் நினைவு சின்னம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், உழைப்பாளர் சிலை அருகே இடதுபுறம் திருப்பி விடப்படும். பின், வாலாஜா சாலை - அண்ணாசாலை - பல்லவன் சாலை வழியாக சென்ட்ரல், பாரிமுனை செல்லலாம்.* சிவானந்தா சாலை மற்றும் கொடிமரச் சாலை முற்றிலும் மூடப்படும்.* காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல செல்லலாம்.* அண்ணாசாலை பெரியார் சிலை - பல்லவன் சாலை வரையிலான சாலை, தற்காலிகமாக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.* முத்துசாமி பாலம் வழியாக அண்ணாசாலை - கொடிமரச் சாலைக்கு, எந்தவித வாகனங்களும் செல்ல அனுமதியில்லை.* தீவுத்திடல் சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா சாலை, அண்ணாசாலை, ஈ.வி.ஆர்., சாலையில் கனரக வணிக வாகனங்கள் செல்ல, மதியம் 12:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.