| ADDED : செப் 18, 2024 12:54 AM
மதுரை:தமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகளை, மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி தாக்கலான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் செல்ல ராஜாமணி தாக்கல் செய்த மனு:சங்க உறுப்பினர்களின் லாரிகள், அரசு மணல் குவாரிகளிலிருந்து மணல் அள்ள பயன்படுத்தப்பட்டது. மணல் அள்ளுவதில் முறைகேடுகள் தொடர்பாக, அமலாக்கத்துறை இயக்குனரகம் விசாரணை மேற்கொண்டது. அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட்டுள்ளன. மணல் அள்ளுவதை முடக்கிய அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் செயலுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மணல் குவாரிகளை மீண்டும் திறக்க கோரி, தமிழக கனிம வளத்துறை செயலருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை இல்லை. மணல் குவாரியை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார்:இம்மனு தவறுதலாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மணல் குவாரிகளை மீண்டும் திறக்கலாமா, வேண்டாமா என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். சங்க உறுப்பினர்களின் லாரிகளை மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் கோரியுள்ளார். மீண்டும் மணல் குவாரிகளை திறக்க அரசுக்கு உத்தரவிடுமாறு உரிமையாக கோர முடியாது.தகுதி அடிப்படையில் இம்மனு ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.