| ADDED : ஆக 22, 2024 11:11 PM
சென்னை:பல்கலைகளில் பட்டப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு, இரண்டு மாதங்களுக்குள் பட்டமளிப்பு விழா நடத்தி சான்றிதழ்கள் வழங்கும்படி, கவர்னர் ரவி அறிவுறுத்தி உள்ளார்.தமிழகத்தில் ஐந்து பல்கலைகளில் துணை வேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால், அந்த பல்கலைகளில் பட்டமளிப்பு விழா நடத்தாததால், உயர் கல்வி, ஆய்வுப் படிப்புகள் மற்றும் உதவித்தொகைகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் அவதியடைந்துள்ளனர். இதுகுறித்து, கவர்னருக்கு உயர்கல்வித்துறை கடிதம் எழுதியது.இதையடுத்து, கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பல்கலைகளின் வேந்தரான கவர்னர், தமிழகத்தின் உயர் கல்வியை முன்னேற்றுவதில் கவனமாக உள்ளார். 2023 ஏப்ரல் முதல் கடந்த மாதம் வரை, 20 பல்கலைகளில், 18 பல்கலைகளில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன. துணை வேந்தர் பதவி காலியாக உள்ள பல்கலைகளின் வழிகாட்டு குழுவுக்கு அக்., 31க்குள் பட்டமளிப்பு விழா நடத்தவும், பல்கலைகளின் மாணவர்கள் பட்டம் பெறுவதை உரிய காலத்தில் உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆய்வு மாணவர்கள், முதுநிலை மாணவர்கள், நெட், ஜே.ஆர்.எப்., உதவித்தொகை பெற வழிகாட்டவும், ஊக்கப்படுத்தவும் அறிவுறுத்தி உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.