உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆழ்வார்பேட்டையில் கோர விபத்து; மது விடுதி கூரை விழுந்து 3 பேர் பலி

ஆழ்வார்பேட்டையில் கோர விபத்து; மது விடுதி கூரை விழுந்து 3 பேர் பலி

சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள மதுபான விடுதி கூரை இடிந்து விழுந்ததில், மூன்று பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விடுதி உரிமையாளர் மற்றும் மேலாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை, ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலை பகுதியில், 'செக்மேட்' என்ற தனியார் மதுபான விடுதி மற்றும் ரெஸ்டாரன்ட் உள்ளது. நேற்று மாலை, இங்கு பலர் மது அருந்தி கொண்டிருந்தனர். திடீரென பயங்கர சத்தத்துடன் மதுபான விடுதியின் கூரை இடிந்து விழுந்தது. அங்கிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். சிலர் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடினர். தகவலறிந்து, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். இரவு 9:00 மணியளவில் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், சிலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். முதற்கட்ட விசாரணையில், இறந்தவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ், 45, மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ், 21, திருநங்கையான லல்லி, 22, என தெரிந்தது.அந்த பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடப்பதால் கட்டடம் இடிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து போலீசார் கூறியதாவது:

மதுபான விடுதி மிகவும் பழமையான கட்டடத்தில் செயல்பட்டு வந்துள்ளது. விடுதி உரிமையாளர் கட்டடத்தை புதுப்பிக்காமல், அதன் உறுதி தன்மையை ஆராயாமல், மதுபான விடுதியை நடத்தி வந்துள்ளார். சில நாட்களாக மெட்ரோ சுரங்கப்பாதை பணி நடந்து வருவதால், கட்டடம் ஆட்டம் கண்டு இடிந்ததா என்பது குறித்து நிபுணர்களின் ஆய்வுக்கு பிறகே தெரிய வரும். இவ்வாறு அவர்கள் கூறினர். அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில், 'சம்பவம் நடந்த இடத்திற்கும் மெட்ரோ ரயில் பணி நடக்கும் இடத்திற்கும் 240 அடி துாரம் உள்ளது. இதனால், விபத்திற்கும், மெட்ரோ ரயில் பணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ