| ADDED : ஜூன் 02, 2024 11:16 PM
மதுரை : 'மொபைல் போன், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என, யு டியூபர் வாசனுக்கு மதுரை அண்ணா நகர் போலீசார் சம்மன் அளித்துள்ளனர்.மதுரை, வண்டியூர் ரிங் ரோடு பகுதியில் வாசன் காரில் சென்ற போது, மொபைல் போனில் ரீல்ஸ் தயாரித்து வீடியோவை யு டியூபில் பதிவேற்றம் செய்தார். இது தொடர்பாக, ஏழு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்தனர். மே 30ல் கைது செய்து, அவரது காரையும் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில், 10 நாட்களுக்கு அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் வாசனுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதன்படி, மூன்று நாட்கள் கையெழுத்திட்ட நிலையில் இன்று ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்கள், மொபைல் போனுடன் ஆஜராக வேண்டும் என, அவருக்கு போலீசார் சம்மன் அளித்துள்ளனர்.