| ADDED : மே 26, 2024 12:50 AM
திருச்சி,:''நாம் தமிழர் கட்சியை விட, பா.ஜ., கூடுதல் ஓட்டு வாங்கி விட்டால், கட்சியை கலைத்து விடுவேன் என்று சீமான் கூறி உள்ளார். அவர் கட்சியை கலைக்க தயாராகி விட்டார்,'' என்று மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார். திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மற்றும் சமயபுரம் மாரியம்மன் ஆகிய கோவில்களில், மத்திய இணை அமைச்சர் சாமி தரிசனம் செய்தார். பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி என்ன பேசினார் என்பதை சரியாக புரிந்து கொள்ளாமல், தமிழக முதல்வர் பொய்யாக பொதுமக்களிடம் திரித்து கூறுகிறார். முதலில் பிரதமர் என்ன பேசினார் என்பதை முதல்வர் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணி பெறவுள்ளது. தமிழக முதல்வர் மத்தியில் இண்டியா கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்று பகல் கனவு காண்கிறார். காங்., இந்த தேர்தலில், 40 இடங்களில் கூட வெற்றி பெறாது. பா.ஜ., 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவது உறுதி. தமிழகத்தில் மிகப்பெரிய திருப்பம் நடக்கவுள்ளது. யாரும் எதிர்பார்க்காத அரசியல் புரட்சியை, இந்த தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தும். நாம் தமிழர் கட்சியை விட, பா.ஜ., கூடுதல் ஓட்டு வாங்கி விட்டால், கட்சியை கலைத்து விடுவேன் என்று சீமான் கூறி உள்ளார். அவர் கட்சியை கலைக்க தயாராகி விட்டார். அதற்காகவே இப்படியெல்லாம் சவால் விட்டு பேசுகிறார். தேர்தல் முடிவுக்குப் பின் சொன்னபடி அவர் கட்சியை கலைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.