ஜூன் 22, 1974 திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், பாடகி ஷோபா தம்பதியின் மகனாக, சென்னையில், 1974ல் இதே நாளில் பிறந்தவர் ஜோசப் விஜய். இவர், சென்னை லயோலா கல்லுாரியில், 'விஷுவல் கம்யூனிகேஷன்' முடித்தார். தன் தந்தை இயக்கிய, வெற்றி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல படங்களில் நடித்தார்.சினிமாவே தன் எதிர்காலம் என்ற குறிக்கோளுடன் நடனம், சண்டை பயிற்சிகள் பெற்றவர், 1992ல் வெளியான 'நாளைய தீர்ப்பு' படத்தில் நாயகனானார். 'ரசிகன்' படத்தில் பாடகரானார். 'செந்துாரப்பாண்டி' படத்தில், விஜயகாந்துடன் நடித்தார். விக்கிரமன் இயக்கிய 'பூவே உனக்காக' படம் பெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து, 'லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர்' உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றன. பாசில் இயக்கிய, 'காதலுக்கு மரியாதை' படத்திற்கு, சிறந்த நடிகர் விருது கிடைத்தது.அதிரடி சண்டை, துள்ளலான நடன காட்சிகளால் ரசிகர்களை கவர்ந்த இவரது, 'கில்லி' படம் 200 நாட்கள் தாண்டி ஓடியது. 'போக்கிரி, துப்பாக்கி' உள்ளிட்ட படங்களும் வசூலை வாரிக் குவித்தன. 'தலைவா' படத்துக்கு அரசியல் தடை ஏற்பட்டது. இதனால், 'விஜய் மக்கள் இயக்க'த்தை அரசியலுக்கான களமாக்கினார். 2024 பிப்ரவரியில், 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை துவங்கி, அடுத்த சட்டசபை தேர்தலை குறி வைத்து, செயல்படுகிறார். 'தளபதி'யின் பொன்விழா ஆண்டு தினம் இன்று!