சென்னை:''ஆவின் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், 'ஓவர் கோட்' அணிந்து பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். சென்னை நந்தனம், ஆவின் தலைமை அலுவலகத்தில், பல்வேறு திட்டங்களின் கீழ், பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியபின், அவர் அளித்த பேட்டி:திருவள்ளூர் காக்களூர் ஆவின் பால் பண்ணையில் உள்ள கன்வேயர் பெல்ட் இயந்திரம், 25 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. இதுவரை எந்த விபத்தும் நடக்கவில்லை. கன்வேயர் பெல்ட்டில் சுரிதார் துப்பட்டா மற்றும் செயின் மாட்டிக் கொண்டதால், பெண் ஊழியர் இறந்துள்ளார். இது, 100 சதவீதம் அவரது கவனக்குறைவால் ஏற்பட்டுள்ள விபத்தாக தெரிகிறது. துப்பட்டா நீளமாக இருந்துள்ளது; அவர் ஒருபக்கம் சரிந்தபோது விபத்து நடந்துள்ளது. துப்பட்டா அணிந்து அங்கு பணிபுரிய அனுமதியில்லை. கிராமத்தில் இருந்து வரும் பெண்கள், துப்பட்டா அணிய வேண்டும் என்கின்றனர். இதற்காக துப்பட்டா அனுமதிக்கப்பட்டு உள்ளது. வரும்காலங்களில் ஓவர் கோட் அணிந்து பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்படும். துப்பட்டா அணியக்கூடாது என்ற விதிமுறையும் செயல்படுத்தப்பட உள்ளது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நிவாரணம் குறித்து அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இதனிடையே, காக்களூர் பால் பண்ணை இரவுப்பணி பொறுப்பாளர் அஜித்குமார், இயந்திரப்பிரிவு பொறுப்பாளர் அகிலேஷ் ராஜா, கண்காணிப்பாளர்கள் விக்னேஷ், கமல்சிங், உதவியாளர்கள் சுரேஷ், அருண்குமார் ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
காலாவதி பால் விற்பனை?
காக்களூரில் ஆவின் பால் பண்ணையில் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி பெண் ஊழியர் பலியான நிலையில், அங்கு தயாரிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகள் அனைத்தும், சென்னை மாதவரம் பால் பண்ணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பால் பாக்கெட்டுகள் நேற்று நள்ளிரவுடன் காலாவதியான நிலையில், அவற்றை இன்று விற்கும் நிலைக்கு, ஆவின் சில்லரை விற்பனை நிலையங்கள் தள்ளப்பட்டன. இதுகுறித்து, ஆவின் நிர்வாக இயக்குனர் வினீத்திடம் கேட்டபோது, ''பழைய பால் பாக்கெட் வினியோகம் செய்யப்பட்டால், விற்பனையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படும். இதுகுறித்து, விற்பனை பிரிவு அதிகாரிகளிடம் விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.