சென்னை:அ.தி.மு.க., கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார். இம்மனு, 25ம் தேதி விசாரணைக்கு வருகிறது.அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தாக்கல் செய்த மனுவில், 'அடிப்படை உறுப்பினரில் இருந்து, பன்னீர்செல்வம் நீக்கப்பட்டு விட்டார். அவருக்கும், கட்சிக்கும் தொடர்பு இல்லை. அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் என, அவர் அறிக்கை வெளியிடுகிறார். நிர்வாகிகளை நியமிக்கிறார்; நீக்குகிறார். கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். எனவே, அ.தி.மு.க., கொடி, சின்னம், பெயர், லெட்டர் பேடு போன்றவற்றை பன்னீர்செல்வம் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், ''அ.தி.மு.க., பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பன்னீர்செல்வம் பயன்படுத்தக் கூடாது. இதுதொடர்பாக, மனுதாரரான பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஏற்கப்படுகின்றன,'' என்று உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து, பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், 'கொடி, சின்னம் பயன்படுத்துவதால் பிரச்னை ஏற்படுவதாக, தொண்டர்கள், பொது மக்கள் புகார் அளிக்கவில்லை. 'தனிப்பட்ட முறையில், பழனிசாமி தான் வழக்கு தொடர்ந்துள்ளார். பொதுச்செயலராக பழனிசாமியை, தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை. எனக்கு விதித்த தடையால், ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது' என, கூறப்பட்டுள்ளது.மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், ஆர்.சக்திவேல் அமர்வில், 25ம் தேதி விசாரணைக்கு வருகிறது.