பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
சென்னை:அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழக அரசு பள்ளிகளில், மாணவர்களின் பன்முகத்திறமையை மேம்படுத்தும் வகையில், 2012ம் ஆண்டில், 16,550 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள், உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், தோட்டக்கலை, கட்டடக்கலை, இசை, தையல், வாழ்வியல் போன்ற பாடங்களை நடத்துகின்றனர்.அவர்களுக்கு மாதம் 12,500 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊதியம் போதாமல் பலர் பணியிலிருந்து விலகி விட்டனர். பணியில் தொடரும் ஆசிரியர்கள், பணி நிரந்தரம் கோரி போராடி வருகின்றனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன், பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இதையடுத்து, நேற்று மாலை சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித்துறை செயலர் மதுமதி சமரச பேச்சு நடத்தினார். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, ஆசிரியர்கள் போராட்டத்தை நிறைவு செய்தனர்.13 ஆண்டு போராட்டம்நாங்கள் மிகக்குறைந்த சம்பளத்தில், 13 ஆண்டுகளாக பணியாற்றுகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்வதாக, 2016, 2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கைகளில், தி.மு.க., வாக்குறுதி அளித்தது. வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றாததால், மீண்டும் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.எங்களை அழைத்து பேசிய பள்ளிக்கல்வித்துறை செயலர், 'சிறப்பாசிரியர் ஊதியத்தை மத்திய அரசு நிறுத்தி விட்டதால், முழு ஊதியத்தையும் மாநில அரசே ஏற்க வேண்டி உள்ளது. இது, அரசுக்கு நெருக்கடியாக உள்ளதால், கோரிக்கையை நிறைவேற்ற அவகாசம் கொடுங்கள். நிச்சயம் நிறைவேற்றித் தருகிறோம்' என, உறுதி அளித்தார். அதனால், போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டுள்ளோம்.- முருகதாஸ்மாநில தலைவர், தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம்