உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்து நீதிமன்ற வளாகங்களுக்கும் நான்கு வாரங்களில் போலீஸ் பாதுகாப்பு

அனைத்து நீதிமன்ற வளாகங்களுக்கும் நான்கு வாரங்களில் போலீஸ் பாதுகாப்பு

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களுக்கும், நான்கு வாரங்களில் போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் தேர்தலை அமைதியாக, ஜனநாயக முறையில் நடத்துவதற்கு உரிய வழிமுறைகளை பிறப்பிக்கவும், விதிகளின்படி சங்கங்கள் இயங்கவும் உத்தரவிடக்கோரி, ஆறு வழக்கறிஞர்கள் சேர்ந்து, 2015ல் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இறுதி விசாரணை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் நடந்தது. இரு தரப்பு வாதங்களுக்குப் பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் சங்கங்கள் சில, பதவிக்காலம் முடிந்தும் நிர்வாகிகள் தேர்தலை நடத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தாதது, சங்க விதிகளை மீறியது மட்டுமின்றி, ஜனநாயக கொள்கைகளையும் மீறுவதாகும். விதிகளின்படி, சங்கங்கள் செயல்படவில்லை என்றால், அங்கீகாரத்தை ரத்து செய்ய பார் கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது.வழக்கறிஞர்களோ, அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களோ, சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டால், தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க பார் கவுன்சிலுக்கு அதிகாரம் உள்ளது. பார் கவுன்சில் நிர்வாகத்தில் தவறு நடந்தாலும், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கான இடம், நீதிமன்ற வளாகங்களில் ஒதுக்கப்படுகிறது. நீதிமன்றங்கள் அமைதியாக இயங்க, சங்கங்களும் சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். நீதிமன்ற வளாகங்களில் இயங்கும் வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் வருகின்றன. உயர் நீதிமன்றத்துக்கு, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்பின், நீதிமன்றம் அமைதியான முறையில் இயங்குகிறது.தமிழகம், புதுச்சேரியில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகங்களிலும், மாநில போலீசாரை பணியமர்த்த வேண்டும். நீதிமன்றங்களில் அசல் ஆவணங்கள், ஆதாரங்கள், பொருட்கள் உள்ளன. அதற்கு, போதிய பாதுகாப்பு இல்லை. இரவு நேர காவலர் மட்டுமே பாதுகாப்புக்கு போதுமானதாக இல்லை. சில வழக்கறிஞர்கள், வழக்காடிகளின் நடவடிக்கைகளால் ஏற்பட்ட சம்பவங்கள் கவனத்துக்கு வந்துள்ளன. எனவே, அனைத்து நீதிமன்ற வளாகங்களுக்கும், நான்கு வாரங்களுக்குள் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம்முடியும் தருவாயில், விதிகளின்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் நடத்த தவறினால், தனி அதிகாரியை நியமித்து, சங்க நிர்வாகத்தை கையில் எடுத்து, நான்கு மாதங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தல் நடத்தவில்லை என்றால், சங்கத்துக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இடத்தை காலி செய்யவும்நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

GMM
ஜூலை 10, 2024 08:27

பாதுகாக்க பட்ட இடம், கருவூலம், வங்கிகள், பொது சொத்துக்கள், தொலை தொடர்பு அலுவலம்... போன்றவற்றுக்கு போலீசார் காவல் தேவை. ஆனால், முழு நேரமும் ஆளும் கட்சியின் கட்டளை கீழ் பணிபுரிந்து வருகின்றனர். நீதிமன்றம் ஒரு துறை. மத்திய, மாநிலத்தில் பல துறைகள் உண்டு. இவை அனைத்தும் போலீசார் பாதுகாப்பு இல்லை. சங்க பதிவை ரத்து செய்ய பார் கவுன்சில் அதிகாரம் பெற்றதா? பார் கவுன்சில் நீதிமன்றம், மக்களுக்கு உதவும் அமைப்பா? / வழக்கறிஞர்களுக்கு மட்டும் உதவி செய்யும் அமைப்பா? வழக்கறிஞர்கள் ஏன் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் மத்திய பாதுகாப்பு படை காவல் புரியும் நிலைக்கு கொண்டு வந்தனர். ஏன் குறிப்பறிந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியவில்லை.


s chandrasekar
ஜூலை 10, 2024 07:50

வழக்கறிஞர் தேர்தலுக்கு முன் இப்படி பாதுகாப்பு. இது எதை காட்டுகிறது. வாழ்க இந்தியா ஜன நாயகம் .


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை