சென்னை : இளம் வழக்கறிஞர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளும் மூத்த வழக்கறிஞர்கள், அவர்களுக்கு குறைந்தபட்சம் 20,000 ரூபாய் உதவி தொகை வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அறிவுறுத்தி, அனைத்து வழக்கறிஞர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப, பார் கவுன்சிலுக்கும் உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரியை சேர்ந்த வழக்கறிஞர் பரிதா பேகம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'வழக்கறிஞர் நல நிதிச்சட்டத்தை, புதுச்சேரியில் கண்டிப்புடன் அமல்படுத்த, அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.இம்மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் தமிழக அரசை, பிரதிவாதியாக சேர்த்தனர். காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் கூட்டத்தை கூட்டி, அறக்கட்டளை குழு சமர்பித்த திட்டங்களை அமல்படுத்துவதை உறுதி செய்ய, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின், இளம் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது குறித்து, நீதிபதிகள் பரிசீலித்து பிறப்பித்த உத்தரவு:வழக்கறிஞர் தொழிலில் நுழையும் இளைய வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். பலர், கிராமப்புறங்களில் இருந்து நகருக்கு வருகின்றனர். அவர்களுக்கு நிறைய சவால்கள் உள்ளன. பொருளாதார பிரச்னையால், அவர்களின் ஊக்கம் தடைபடக் கூடாது. வழக்கறிஞர் தொழிலை விட்டு வெளியேறும் நிலைக்கு பலர் தள்ளப்படுகின்றனர். அவர்களின் வளர்ச்சிக்கு, கற்பிப்பதற்கு, பாதுகாப்பான சுமுகமான சூழ்நிலையை உறுதி செய்ய வேண்டும்.எனவே, இளம் வழக்கறிஞர்களுக்கு, போதிய மாத உதவித்தொகையை வழங்கினால், அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். புதுச்சேரியில், வழக்கறிஞர்களுக்கான நல நிதியை அதிகரிப்பதற்கான திருத்தத்தை பார் கவுன்சில், புதுச்சேரி அரசு மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் ஒருங்கிணைந்து இறுதி செய்ய வேண்டும்.இளம் வழக்கறிஞர்களை பணி அமர்த்தி, அவர்களின் சேவையை பெறும் மூத்த வழக்கறிஞர் உள்ளிட்ட எந்த வழக்கறிஞரானாலும், மாத உதவி தொகையாக குறைந்தபட்சம் 20,000 ரூபாயை வழங்க வேண்டும். சென்னை, கோவை, மதுரையில் வழக்கறிஞர் தொழிலில் உள்ளவர்களுக்கு, இந்த தொகையும், மற்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கு, குறைந்தபட்சம் 15,000 ரூபாயும் வழங்க வேண்டும். பாகுபாடு காட்டாமல், இந்த தொகை வழங்கப்பட வேண்டும்.அனைத்து வழக்கறிஞர்களுக்குமான இதுகுறித்த வழிமுறைகள், அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கையை, நான்கு வாரங்களில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.