| ADDED : ஜூலை 30, 2024 04:52 AM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பில் சொந்த அத்தையை தாக்கி நகைகளை கொள்ளை அடித்தவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.சேத்தியாத்தோப்பு முருகன் கோவில் தெருவை சேர்ந்த சீத்தாராமன் மனைவி கமலம்மாள், 75; இவர், கடந்த ஜனவரி 29ம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர் முகத்தில் மயக்க மருந்து தெளித்து 17 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றார்.புகாரின்பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோட்டில் சந்தேகிக்கும்படி நின்ற நபரை, தனிப்படை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், அவர், மூதாட்டி கமலம்மாளின் அண்ணன் மகன் சபரி,43; என்பதும், கமலம்மாளின் முகத்தில் மயக்க மருந்தை தெளித்து 17 சவரன் நகைகளை கொள்ளை அடித்ததும், அதற்கு முன்பாக நவம்பர் 22ம் தேதி சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின் ரோட்டில் சந்துரு என்பவரது வீட்டில் புகுந்து 4 சவரன் நகை, டிசம்பர் 8ம் தேதி பின்னலுார் மெயின்ரோட்டில் சிவராமன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து 5 சவரன் நகை, பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த சித்ரா என்ற பெண்ணிடம் 17 சவரன் நகைகளை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.அதன்பேரில் போலீசார் சபரியை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 25 சவரன் நகைகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.