உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாவட்டத்திற்கு ஒரு கிராமம் வீதம் மாநிலம் முழுதும் சூரிய மின் நிலையம்

மாவட்டத்திற்கு ஒரு கிராமம் வீதம் மாநிலம் முழுதும் சூரிய மின் நிலையம்

சென்னை:பிரதமர் சூரிய மின் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு கிராமத்திற்கு சூரியசக்தி மின்சாரம் வினியோகிக்க, சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.நாடு முழுதும், ஒரு கோடி வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, பிரதமரின் சூரியசக்தி இலவச மின் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின்கீழ், ஒரு கிலோ வாட் திறனில் மின் நிலையம் அமைக்க, 30,000 ரூபாயும்; 2 கிலோ வாட்டிற்கு, 60,000 ரூபாயும் மானியம் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் அமைக்கப்படும் ஒவ்வொரு கிலோ வாட்டிற்கும், 18,000 ரூபாய் மானியம் கிடைக்கும். பிரதமரின் திட்டத்தின் கீழ், மாதிரி சூரிய கிராமம் என்ற திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒரு கிராமத்திற்கு தேவைப்படும் மின்சாரம் முழுதும் சூரியசக்தி மின் நிலையம் வாயிலாக வினியோகம் செய்யப்பட்ட உள்ளது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:பிரதமரின் திட்டத்தின் கீழ், கிராமங்களில் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க, மத்திய அரசு தலா ஒரு கிராமத்திற்கு, ஒரு கோடி ரூபாய் நிதி வழங்க உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும், 5,000க்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கிராமத்தில், சூரியசக்தி மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் கிராமங்களை அடையாளம் காணும் பணி துவக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசின் 'டெடா'

தமிழக கிராமங்களில் சூரியசக்தி மின் நிலையம் அமைத்து, அதில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுதும் கிராமத்திற்கே வினியோகிக்கும் திட்டத்தை, விழுப்புரம் மாவட்டம், இரும்பை கிராமத்தில் செயல்படுத்த, 'டெடா' எனப்படும், தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை முடிவு செய்தது. பல ஆண்டுகளுக்கு முன்னரே, இத்திட்டத்தின் கீழ், 2 கோடி ரூபாய் செலவில், 170 கிலோ வாட் திறனில் சூரிய சக்தி மின் நிலையம் அமைத்து, இரும்பையில் உள்ள, 200 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட இருந்தது. இதற்காக மின் நிலையம் அமைக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, பலமுறை 'டெண்டர்' கோரியும் திட்டத்தை செயல்படுத்த வில்லை. தற்போது, இதே நோக்கம் உடைய திட்டத்தை, மத்திய அரசு நாடு முழுதும் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஆக 14, 2024 07:17

மத்திய அரசின் வீட்டுக் கூரையின் மேல் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டமும் பணக்காரர்கள் மட்டுமே பயன்பெறக் கூடியது ஆகும்.ஏழைகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகினால் அவை கருவிகள் அமைக்க ஆகும் செலவில் 90 சதவிகிதம் அளவுக்கே கடன் தர முடியும் என கூறுவதோடு பல நிபந்தனைகளை கூறுகின்றன.இந்த திட்டம் வருவாய்க்கு வழி வகுக்கும் திட்டம் என்பதால் உரிய ஏழைகளுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு திட்டம் வகுக்காமல் வாக்கு வங்கியை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் வகுத்து 75 கோடி ரூபாய் மானியமும் உடனடியாக விடுவித்தனர்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ