சென்னை: தமிழகத்தில், 13 இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. இன்றும் மழை தொடரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம், புதுச்சேரியில் இந்த மாதம், 1ம் தேதி முதல் கோடை வெயில் தீவிரமாகியுள்ளது. மாநிலம் முழுதும் கோடை மழையும் துவங்கியுள்ளது. கடந்த, இரண்டு நாட்களாக பல இடங்களில் கோடை மழை பெய்துள்ளது.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், 13 இடங்களில் கோடை மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நாலு முக்கு பகுதியில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது. புலிப்பட்டி, ஆவுடையார்கோயில், நாகுடி, ஸ்ரீவைகுண்டம், 2; போடி, நாங்குநேரி, மண்டபம், காரைக்குடி, தொண்டி, ஆனைமலை, அறந்தாங்கி, சேர்வலாறு அணை, 1 செ.மீ., மழை பெய்துள்ளது.தென் இந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. தென் மாநிலங்களில் இன்று மிதமான மழை பெய்யும். நாளை முதல் வரும், 28ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.