| ADDED : ஏப் 02, 2024 02:38 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் எழுந்த ராட்சத அலையிலும் தடுப்பு வேலி பாறாங்கற்களால் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை தப்பியது.தனுஷ்கோடியில் 1964ல் ஏற்பட்ட புயலால் சாலை, ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அன்று முதல் 53 ஆண்டுகளாக போக்குவரத்து வசதியின்றி பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் தனுஷ்கோடி செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.பிரதமர் மோடி பதவியேற்றதும் 2017ல் தனுஷ்கோடி- அரிச்சல்முனைக்கு ரூ.70 கோடியில் தேசிய நெடுஞ்சாலை அமைத்தார்.தற்போது மார்ச் 31ல் தனுஷ்கோடியில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் ராட்சத அலைகள் எழுந்தன. இரண்டாம் நாளான நேற்றும் ராட்சத அலைகள் எழுந்ததால் தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரை 5 கி. மீ.,க்கு ஆங்காங்கே சாலையில் பாராங்கற்களின் உடைந்த சிறிய துகள்கள் பரவி கிடக்கின்றன.இச்சூழலில் நேற்று தனுஷ்கோடி செல்ல பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் தடை விதித்தனர். கடந்த இரு தினங்களாக எழும் ராட்சத அலைக்கு தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை சேதம் அடையாமல் கடலோரத்தில் அமைத்துள்ள பாறாங்கற்கள் பாதுகாப்பு அரணாக இருந்ததால் தனுஷ்கோடி சாலை தப்பியது.
8000 ஆமை முட்டைகள் வீணாகுமா
தனுஷ்கோடி கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பால் ராட்சத அலைகள் எழுந்து தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கடல்நீர் சூழ்ந்தது. தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம், கம்பிபாடு கடற்கரையில் வனத்துறையினர் அமைத்துள்ள பாதுகாப்பு வேலிக்குள் 8000 ஆமை முட்டைகளை புதைத்து வைத்திருந்தனர்.இந்த பாதுகாப்பு வேலிக்குள் கடல்நீர் குளம் போல் தேங்கியதால் முட்டைகளுக்கான வெப்ப சீதோஷ்ண நிலையின்றி குஞ்சுகள் பொரிக்க வாய்ப்பின்றி அழிந்து போகக் கூடும் என்று கடல்சார் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.வேலிக்குள் தேங்கிய கடல்நீரை வெளியேற்றி உள்ளோம். இப்பகுதியில் மீண்டும் வெயில் சுட்டெரிப்பதால் முட்டைக்கு இயற்கையான வெப்ப சலனம் கிடைக்கக் கூடும். எனவே முட்டையில் இருந்து எதிர்பார்த்தபடி குஞ்சுகள் பொரிக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.