| ADDED : ஆக 15, 2024 12:29 AM
சென்னை:படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, 1 கோடி ரூபாய் செலுத்தியதை தொடர்ந்து, நடிகர் விக்ரம் நடித்த, தங்கலான் படத்தை இன்று ( ஆக.,15) வெளியிட தடையில்லை.சென்னையை சேர்ந்த வர் தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ். 'திவாலானவர்' என அறிவிக்கப்பட்ட அவர், மரணம் அடைந்தார். அவரின் சொத்துக்களை, சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து வருகிறார்.அர்ஜுன்லால் சுந்தர்தாசிடம், 'ஸ்டுடியோ கிரீன்' பட தயாரிப்பு நிறுவன பங்குதாரர்கள் ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோர், 2013ல் 10.35 கோடி ரூபாய் கடன் பெற்றனர். வட்டியுடன் இந்த தொகையை ஞானவேல்ராஜா திருப்பி செலுத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தங்கலான் படத்தை வெளியிடும் முன், 1 கோடி ரூபாயை 'டிபாசிட்' செய்ய உத்தரவிட்டது.அதன்படி, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன்,சி.வி.கார்த்திகேயன் அடங்கிய அமர்வு முன், நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'நீதிமன்ற உத்தரவின்படி சொத்தாட்சியர் கணக்கில் ஒரு கோடி ரூபாய் செலுத்தப்பட்டது' எனக் கூறி, ஞானவேல்ராஜா தரப்பில்மனு தாக்கல் செய்யப்பட்டது.இதை பதிவு செய்த நீதிபதிகள், தங்கலான் படத்தை, இன்று வெளியிட எந்த தடையும் இல்லை என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 28க்கு தள்ளிவைத்தனர்.