| ADDED : ஏப் 19, 2024 10:22 PM
சென்னை:சென்னை அண்ணா நகரில் வசிக்கும் நடிகர்கள் விஷால், ஆர்யா இருவரும், வள்ளியம்மை பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில் நேற்று ஓட்டை பதிவு செய்தனர்.கடந்த சட்டசபை தேர்தலில், நடிகர் விஜய் கருப்பு சட்டையுடன் சைக்கிளில் வந்து ஓட்டளித்தார். அதுபோலவே, விஷாலும் நேற்று கருப்பு பனியன் அணிந்து, 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சைக்கிளில் வந்து ஓட்டளித்தார். அதன்பின் விஷால் கூறியதாவது:முதல்முறை வாக்காளர்களை கெஞ்சி கேட்கிறேன், வெயிலை பார்க்காமல் அனைவரும் வந்து தவறாமல் ஓட்டளியுங்கள். அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என, படம் பார்ப்பது போல நினைத்து விட்டுவிட வேண்டாம். உங்களுக்கு பிடித்த வேட்பாளரை யோசித்து முடிவு எடுங்கள்.சினிமாவில் மட்டுமே ஹீரோக்கள் காப்பாற்றுவர். வெளியில் நீங்கள் தான் ஹீரோ. எங்களை போன்ற நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வருகின்றனர் என்பதை, அரசியல்வாதிகள் தான் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.அதே பள்ளியில் ஓட்டளித்த நடிகர் ஆர்யா கூறுகையில், ''இளம் வாக்காளர்களுக்கு, வாக்காளர் அடையாள அட்டையின் முக்கியத்துவம் தெரிவதில்லை. அவற்றை கால தாமதமாக தான் எடுக்கின்றனர். ஓட்டின் அவசியம் குறித்து, இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.