உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நம் இமேஜை காப்பாத்துறவங்களை மதிக்கணும்பா! அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் பழனிசாமி வேண்டுகோள்

நம் இமேஜை காப்பாத்துறவங்களை மதிக்கணும்பா! அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் பழனிசாமி வேண்டுகோள்

'ஒன்றிய செயலர்கள் மீது நிறைய புகார்கள் வருகின்றன. அவர்களை கண்காணித்து, அவர்களும் சிறப்பாக செயல்பட வைக்க வேண்டிய பொறுப்பு, மாவட்டச் செயலர்களுக்கு உள்ளது' என, அ.தி.மு.க., அவசர செயற்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி பேசியுள்ளார். அக்கூட்டத்தில் பழனிசாமி பேசியுள்ளதாவது:திராவிட இயக்கங்களுக்கு அச்சாணி போன்றவர்கள் மாவட்ட செயலர்கள். அதனால் தான், கட்சியின் எந்த முக்கிய முடிவும் அவர்களை கலந்து ஆலோசிக்காமல் எடுக்கப்படுவதில்லை. அவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்போர், ஒன்றிய செயலர்கள். நகர செயலர்கள் இருந்தாலும், கிராம அளவில் மக்களோடு மக்களாக பணியாற்றி கட்சியை வளர்ப்பவர்கள் அவர்கள் தான். ஆனால், சமீப காலமாக அவர்களுடைய செயல்பாடுகள், விமர்சனத்துக்கு உள்ளாகின்றன. பலர் மீது தலைமைக்கு புகார்கள் வருகின்றன. அதையெல்லாம் கவனத்தில் எடுத்து, தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதில், தலைமைக்கு பெரிய ஆர்வம் இல்லை; இருந்தாலும், புகார்களை விசாரிக்க வேண்டிய கடமை உள்ளது. அதனால், ஒன்றிய செயலர் மீது புகார் வந்தாலும், அதை மா.செ.,வுக்கு அனுப்பி விசாரித்து, நடவடிக்கைக்கு பரிந்துரைக்கச் சொல்கிறோம். அப்படி செய்ததில், நிறைய பேர் மீதான புகார், உண்மை என தெரிய வந்திருக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தலைமை உள்ளது. இருந்தாலும், சிறிய எச்சரிக்கையோடு, தொடர்ந்து வாய்ப்பு தர தலைமை முடிவெடுத்திருக்கிறது. தப்பி விட்டோம் என நினைத்து, தொடர் தவறுகளில் ஈடுபட்டு புகார்கள் அணிவகுத்தால், நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியை எப்போதும் ஜெயலலிதா பாணியில் தான் நடத்த வேண்டும். அதே போல, கட்சியின் கொள்கை மற்றும் பிரசாரத்தை, மக்களுக்கு அன்றாடம் எடுத்துச் செல்லும் தொலைக்காட்சி பேச்சாளர்களுக்கு உரிய முக்கியத்துவமும், மரியாதையும் அளிக்க வேண்டும் என மா.செ.,க்களுக்கு பல முறை அறிவுறுத்தப்பட்டிருக்கிறது; ஆனாலும், அது குறித்து மா.செ.,க்கள் கண்டுகொள்வதே இல்லை. வெளியூர்களுக்கு செல்லும் தொலைக்காட்சி பேச்சாளர்களுக்கு குறைந்தபட்ச மரியாதை கூட, மா.செ.,க்கள் அளிப்பதில்லை. அவர்களுக்கான எந்த வசதியையும் செய்து கொடுப்பதில்லை. அது அவர்களுக்கு செய்யும் அவமரியாதை அல்ல; கட்சிக்கும் எனக்கும் செய்யும் அவமரியாதை. இப்படி வருத்தப்பட்டு சொல்வதற்கான காரணம் உள்ளது. 'பத்து தோல்வி பழனிசாமி' என, எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல, நம்மோடு இருந்தவர்களே கடும் விமர்சனத்தை வைக்கின்றனர். கடந்த லோக்சபா தேர்தலில் கட்சி பெரும் தோல்வியை சந்தித்த பின், இப்படிப்பட்ட விமர்சனங்கள், கட்சியின் துரோகிகளாலும், எதிர்க்கட்சியினராலும் வைக்கப்படுகின்றன. இது மக்கள் மத்தியில் சென்று சேர்ந்தால், அ.தி.மு.க.,வை பற்றிய நல்ல எண்ணம் போய் விடும். அதனால், பொய்யான விஷயத்தை எதிர்க்கட்சியினரும், நம்முடைய எதிராளிகளும் திட்டமிட்டு பரப்புகின்றனர். அதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என, நம் கட்சியின் தொலைக்காட்சி பேச்சாளர்களை கேட்டுக் கொண்டேன். அதன்பின், அவர்கள் அ.தி.மு.க.,வின் உண்மையான கட்டமைப்பு பலம் குறித்தும், தோல்வி என பரப்பப்படும் பொய் செய்தி குறித்தும் விளக்கமாக பேசினர். நெருக்கடியான கால கட்டத்தில், தொலைக்காட்சி வாயிலாக மக்கள் மத்தியில் கட்சியின் இமேஜை தக்க வைப்பவர்கள் அவர்கள்.அப்படிப்பட்டவர்கள் உங்கள் ஊருக்கு வரும்போது, அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, மரியாதை செய்து அனுப்ப வேண்டும். அதை விடுத்து, அவர்களை புறக்கணித்தால் சோர்ந்து விடுவர். அவர்களை நல்ல முறையில் கவனித்துக் கொள்ள வேண்டியது, ஒவ்வொரு மா.செ.,வின் பொறுப்பு. அதேபோல, கட்சிக்கென சிறப்பாக வியூகம் வகுத்துக் கொடுப்போரை விரைவில் நியமிக்கவிருக்கிறோம். அதற்காக, சில வியூக வகுப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களிடம் பேசி வருகிறோம். விரைவில், அவர்கள் தங்கள் பணியை துவங்குவர். அவர்களுக்கும் முழுமையாக உதவ வேண்டியது, மா.செ.,க்கள் தான். வரும் 2026 சட்டசபைத் தேர்தலுக்கு, மற்ற கட்சிகளுக்கு முன்பாக அ.தி.மு.க., தயாராக வேண்டும். முன்கூட்டியே ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் வேட்பாளர் தேர்வு இறுதி செய்யப்பட்டு விடும். இவ்வாறு அவர் பேசியுள்ளதாக தெரிகிறது.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ