மேலும் செய்திகள்
தும்பிக்கை இழந்த யானையிடம் பாசத்தை காட்டி அசத்திய தாய்
3 hour(s) ago
அரசியல் கூட்டங்களில் நெரிசலை தவிர்க்க... வருகிறது தீர்வு
3 hour(s) ago
முன்னாள் அமைச்சர் மீதான ஐந்து வழக்குகள் ரத்து
4 hour(s) ago
சென்னை:கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 65 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் சமூக - பொருளாதார பிரச்னைக்கு தீர்வு காண அரசை வலியுறுத்தி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், குமரப்பன் அமர்வு, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளை, வழக்கில் பிரதிவாதிகளாக சேர்த்து, பதில் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.இவ்வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், குமரப்பன் அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், சிறப்பு பிளீடர் டி.சந்திரசேகரன் ஆஜராகினர். அரசு தரப்புக்கு, நீதிபதிகள் பல கேள்விகள் எழுப்பினர். கல்வராயன் மலையில் தற்போதைய சூழ்நிலையை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்வதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு வழக்கறிஞர் சீனிவாசமூர்த்தி, 'நோட்டீஸ்' பெற்றார்.இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:கடந்த 1976ல் தான், கல்வராயன் மலைப்பகுதி, இந்தியா உடன் இணைக்கப்பட்டதாகவும், 1996 முதல் தான் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு ஓட்டுரிமை கிடைத்ததையும் கேள்விப்படும்போது, அதிர்ச்சியாக உள்ளது. அதனால், மாநிலத்தின் மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது, கல்வராயன் மலைப்பகுதியின் வளர்ச்சி என்பது கண்டிப்பாக பின்தங்கி தான் இருக்கும்; அதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது.கல்வராயன் மலைப்பகுதியில், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பதாக, ஊடக செய்திகள் மற்றும் ஆவணங்கள் வாயிலாக அறிந்தோம். அந்தப் பகுதி மக்களுக்கு, அரசின் நலத் திட்டங்கள் கிடைக்கின்றனவா, அடிப்படை வசதிகள் கிடைக்கிறதா என்பதை, அரசு தெளிவுபடுத்த வேண்டும். அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள்.அந்தப் பகுதி மக்களின் முன்னேற்றத்துக்கு, நலனுக்கு, அரசு தரப்பில் என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை விளக்க வேண்டும். ஒவ்வொருவரும் ஓட்டுப்பதிவு செய்வதை உறுதி செய்ய, மிகவும் பின்தங்கிய பகுதிக்கு எல்லாம் தேர்தல் ஆணையம் செல்கிறது. அதேபோல், கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கும் நலத்திட்டங்கள், வசதிகள் சென்று சேர்வதை, அரசும் உறுதி செய்ய வேண்டும். இது, அரசின் சட்டப்பூர்வ கடமை.எனவே, அரசிடம் இருந்து ஒருங்கிணைந்த அறிக்கை பெறப்பட வேண்டும். நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக, மூத்த வழக்கறிஞர் தமிழ்மணியை நியமிக்கிறோம். கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு சமூக, பொருளாதார வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இந்தப் பிரச்னைக்கு நீதிமன்றம் தீர்வு காண ஏதுவாக, இந்தப் பகுதியை ஆய்வு செய்த ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிக்கை தாக்கல் செய்யலாம்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.விசாரணையை, வரும் 24க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago