சென்னை : சென்னையில், வீட்டு வாசலில் அனுமதியின்றி வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து போலீசார் அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தனியார் நிறுவன அதிகாரி கிேஷார் என்பவர் தாக்கல் செய்த மனு:சென்னை அண்ணாநகர், 'என்' பிளாக்கில், 25வது தெருவில் வசிக்கிறேன். எங்கள் குடியிருப்பு பகுதியில், தெருவோர உணவு கடைகளை, உரிமம் பெறாமல் நடத்துகின்றனர். தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் வாகனங்களை அருகில் உள்ள தெருக்களில் நிறுத்துகின்றனர். இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சட்டவிரோத செயல்களும் நடக்கின்றன. பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.எனவே, உரிமம் பெறாமல் இயங்கும் கடைகளையும், அனுமதியின்றி நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களையும் அகற்ற உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, ''மனுதாரரின் புகாரை விசாரித்து வாகனங்கள் அகற்றப்பட்டு, அந்தப் பகுதியில், 'நோ பார்க்கிங்' போர்டு வைக்கப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.இதையடுத்து, குடியிருப்பு பகுதிகளில் வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி வாசலில், வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, போக்குவரத்து போலீசாருக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.