சென்னை:தவறாக வழிநடத்த முயற்சித்ததாக, பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிராக, மாணவியர் அளித்த புகாரை, விசாகா குழுவுக்கு அனுப்பாதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி, சம்பந்தப்பட்ட கல்லுாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அருப்புக்கோட்டை கல்லுாரி பேராசிரியை நிர்மலாதேவி மீது, மாணவியரை தவறாக வழிநடத்த முயற்சித்தாக, 2018ல் வழக்கு பதிவானது. பின், இவ்வழக்கு, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கை பெண் டி.ஐ.ஜி., தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நிர்வாகி கணேசன், வழக்கு தொடர்ந்திருந்தார்.வழக்கை விசாரித்த முதல் பெஞ்ச், பாதிக்கப்பட்ட நபர்கள் தரப்பில் இருந்து, விசாகா குழுவில் புகார் அளிக்கப்பட்டதா என்பது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய முதல் பெஞ்ச் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பாதிக்கப்பட்ட மாணவியர் தரப்பில், கல்லுாரி முதல்வரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதை பல்கலை அமைத்துள்ள விசாகா குழுவுக்கு அனுப்பி இருக்க வேண்டும்' என்றார்.இதையடுத்து, கல்லுாரி நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், 'மாணவியரின் புகாரை, இதுவரை விசாகா குழுவுக்கு அனுப்பாதது ஏன்' என, முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது.இதுதொடர்பாக விளக்கம் பெற்று தெரிவிப்பதாக கல்லுாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதனால், ஆறு ஆண்டுகள் கடந்தும் மாணவியரின் புகாரை, விசாகா குழுவுக்கு அனுப்பாதது ஏன் என, ஜூன் 7க்குள் விளக்கம் அளிக்கும்படி, கல்லுாரி தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.