உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தி.மலை கார்த்திகை தீப திருவிழா பாதுகாப்புக்கு 15,000 போலீஸ்: ஐகோர்ட்டில் டி.ஜி.பி., தகவல்

 தி.மலை கார்த்திகை தீப திருவிழா பாதுகாப்புக்கு 15,000 போலீஸ்: ஐகோர்ட்டில் டி.ஜி.பி., தகவல்

சென்னை: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருவண்ணாமலையில் பக்தர்கள் பாதுகாப்புக்கு, 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், டி.ஜி.பி., தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வரும், டிசம்பர் 3ம் தேதி கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். அவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்; நெரிசல் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். அறிக்கை தாக்கல் இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டது. அதன்படி, டி.ஜி.பி., மற்றும் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., ஆகியோர் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதன் விபரம்: மகா தீபத்தை முன்னிட்டு, திருவண்ணாமலையில், 35 லட்சம் பக்தர்கள் திரளுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் வசதிக்காக, கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆர்.எப்.ஐ.டி., எனும் ரேடியோ அதிர்வெண் அடையாள பாஸ் வழங்கும் திட்டம், நடப்பாண்டும் பின்பற்றப்படும். தீபம் நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டுகளிக்க, கோவிலில், 26 இடங்களில் எல்.இ.டி., திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன. திருவண்ணாமலையில் 15,011 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர். மேலும், 88 குற்றத்தடுப்பு குழுக்கள், 87 சதிச்செயல்கள் தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, கிரிவல பாதையில் பக்தர்களை துன்புறுத்துவதை தடுக்கவும், பணம் பறிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை மாட வீதிகளில், 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை மற்றும் தங்குமிடத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பு ஆகியவற்றை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கூட்டத்தில் குழந்தைகள், தங்கள் பெற்றோரை பிரிந்து தனித்து விடப்படும் நிகழ்வை தடுக்கவும், அவர்களின் பாதுகாப்புக்கும் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதை பதிவு செய்த நீதிபதி, விசாரணையை நாைள தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை