உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெள்ளை ஈ நோய்க்கு மருந்து கண்டுபிடிக்காவிட்டால் 16 லட்சம் ஏக்கர் தென்னை மரங்கள் அழியும்

வெள்ளை ஈ நோய்க்கு மருந்து கண்டுபிடிக்காவிட்டால் 16 லட்சம் ஏக்கர் தென்னை மரங்கள் அழியும்

சென்னை:''வெள்ளை ஈ நோய்க்கு மருந்து கண்டுபிடிக்காவிட்டால், தமிழகத்தில் 16 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தென்னை மரங்கள் அழிந்துவிடும்,'' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் எச்சரிக்கை விடுத்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - பொள்ளாச்சி ஜெயராமன்: கேரள மாநிலத்தை விட அதிகமாக பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், சுல்தான்பேட்டை மற்றும் தஞ்சை உட்பட, 40க்கும் அதிகமான சட்டசபை தொகுதிகளில், தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது.காமராஜர் ஆட்சியில் நிலக்கடலை பயிர்களில் கம்பளி பூச்சி தாக்குதல் ஏற்பட்டது. அப்போது, விமானம் வாயிலாக 4 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு மருந்து அடித்து, நிலக்கடலை பயிர்களை காப்பாற்றினர். ஆனால், இப்போது வெள்ளை ஈ தாக்குதலுக்கு மத்திய, மாநில அரசு விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடிக்கவில்லை.அ.தி.மு.க., - வேலுமணி: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததைப் போல, தென்னை, பாக்கு மரங்களை தாக்கி அழிக்கும் வெள்ளை ஈக்களை அழித்தொழிக்க, மருந்து கண்டறிய வேண்டும்.பொள்ளாச்சி ஜெயராமன்: தென்னை மரங்கள் அழிந்துவிட்டால், அதை வெட்டி எடுத்துவிட்டு, வேறு விவசாயம் செய்ய முடியாது. வெள்ளை ஈ தாக்குதல் மட்டுமல்லாது, கேரள மஞ்சள் வாடல் நோய், தஞ்சாவூர் வாடல் நோய், கேரள வாடல் நோய் தாக்குதலும் அதிகரித்துள்ளன. இதனால், தேங்காய் ஏற்றிச் சென்ற லாரிகளில், தென்னை மரங்களை ஏற்றி, செங்கல் சூளைக்கு அனுப்பி கொண்டிருக்கின்றனர். வெள்ளை ஈ தாக்குதலுக்கு மருந்து கண்டறியாவிட்டால், 16 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள தென்னை மரங்கள் முற்றிலும் அழிந்து விடும்.பொள்ளாச்சியில் இருந்து சீனாவுக்கு மட்டும், 3,000 கோடி ரூபாய்க்கு தென்னை நார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. தேங்காய் விளைச்சல் சரியில்லாததால், தென்னை நார் தொழில் கேள்விக்குறியாகியுள்ளது. இதை காப்பாற்றாவிட்டால், 10,000 கோடி ரூபாய் ஏற்றுமதி பாதிக்கப்படும். எனவே, தென்னை நார் தொழிலுக்கு மின் கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும்.அமைச்சர் பன்னீர்செல்வம்: தமிழகத்தில், 27 லட்சம் ஏக்கரில், தென்னை விவசாயம் நடந்து வருகிறது. தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் மிக முக்கியமான பிரச்னையாக உள்ளது. பொள்ளாச்சி உட்பட பாதிக்கப்பட்ட பகுதிகளில் விஞ்ஞானிகள், வேளாண் பல்கலை, தோட்டக்கலை அதிகாரிகளால் நேரடியாக கள ஆய்வு செய்து, தனி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளை ஈ தாக்குதலுக்கு மருந்து கண்டுபிடிக்க கால அவகாசம் தேவை. இயற்கை இடர்பாடுகளை சந்தித்துதான் விவசாயிகள் வாழ வேண்டிய சூழல் உள்ளது. வெள்ளை ஈ தாக்குதலுக்கு மருந்து கண்டுபிடித்து, தென்னை விவசாயிகளை, தி.மு.க., காப்பாற்றும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை