கடலூர் : ''தமிழகத்தில், கடந்த இரண்டரை மாதங்களில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 1,638 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என, ஏ.டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் கூறினார். குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குனர் (ஏ.டி.ஜி.பி.,) ராதாகிருஷ்ணன் கடலூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:கடத்தல் கும்பலில் தலைவனாக இருந்து செயல்பட்டு வரும் இதயதுல்லாவை தீவிரமாகத் தேடி வந்தோம். இந்தக் கும்பல் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில், ரேஷன் அரிசியை சில்லறை விலைக்கு வாங்கி சேகரித்து, புதுச்சேரியில் பதுக்கி வைத்து ஆந்திரா, கர்நாடகாவிற்கு லாரியில் அனுப்புவது தெரிந்தது.இந்நிலையில், பண்ருட்டி அருகே காடாம்புலியூர் சாலையில், கடந்த 25ம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்ததில், ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அதில் இருந்த டிரைவர் செந்தாமரைக்கண்ணனை கைது செய்து விசாரித்ததில், மடுகரையில் உள்ள குடோனில், பதுக்கி வைத்திருந்த 300 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
கடத்தலில் தலைவனாக இருந்த இதயதுல்லா உட்பட, 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதயதுல்லா மீது, ஏற்கனவே 17 வழக்குகள் உள்ளன. கடந்த 2 மாதத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த இரண்டரை மாதங்களில் ரேஷன் பொருட்கள் கடத்தலில், 3,062 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 1,638 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 60 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 33 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் 1,137 காஸ் சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார். கடலூர் எஸ்.பி., பகலவன் உடனிருந்தார்.