சென்னை: ''பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, வரும் 12ம் தேதி முதல், 19,484 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்,'' என, அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம், நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. பின், அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி:பொங்கலுக்கான சிறப்பு பஸ்கள், வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை, சென்னையில் இருந்து இயக்கப்படும். மூன்று நாட்கள் வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன், 4,706 சிறப்பு பஸ்கள் சேர்த்து இயக்கப்படும். மூன்று நாட்களுக்கு, 11,006 பஸ்கள் இயக்கப்படும். பிற ஊர்களில் இருந்து 8,478 சிறப்பு பஸ்கள் என ஒட்டு மொத்தமாக, 19,484 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.அரசு விரைவு பஸ்களை பொறுத்தவரை, பெங்களூரு மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பஸ்கள், கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு பஸ்கள், கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும். கோயம்பேடு, கிளாம்பாக்கம் தவிர, வேறு எங்கிருந்தும் விரைவு பஸ்கள் இயக்கப்படாது.மற்ற போக்குவரத்து கழகங்கள் சார்பில், சிறப்பு பஸ் நிலையங்களில் இருந்து, பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பொங்கல் முடிந்த பின், பிற ஊர்களில் இருந்து சென்னை வரும் பயணியருக்காக, 16 முதல் 18ம் தேதி வரை, வழக்கமாக இயங்கும் 2,100 பஸ்களுடன், 4,830 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பிற ஊர்களில் இருந்து, 6,459 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பொங்கலுக்கு பிறகான நாட்களில், 17,589 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.முன்பதிவுசென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில், ஐந்து; தாம்பரம் சானடோரியத்தில், ஒன்று; கிளாம்பாக்கத்தில் ஐந்து முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. www.tnstc.inஎன்ற இணையதளம் வழியாகவும், tnstc எனும் மொபைல் ஆப் வழியாகவும் முன்பதிவு செய்யலாம்.மேலும் தகவல்களுக்கு, 94450 14450, 94450 14436 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், 1800 4256151 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 044 - 2474 9002, 2628 0445, 2628 1611 ஆகிய தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அரசு பஸ் பயணியருக்கு
பரிசு திட்டம் அறிவிப்புபோக்குவரத்து கழக ஓய்வூதியர்கள், இ - சேவை மையம் வாயிலாக, உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கும் வசதியை, அமைச்சர் சிவசங்கர் நேற்று துவக்கி வைத்தார்.இந்த திட்டத்தின்படி, ஜனவரி முதல் மார்ச் முடிய, அரசு இ- - சேவை மையத்தில், தங்களது கைரேகையை பதிவு செய்து, அதன் வாயிலாக உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். இனி வரும் காலங்களில், இம்முறையே நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டத்தால், 65,498 ஓய்வூதியதாரர்களும், 25,420 குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயனடைவர்.இதேபோல், அரசு பஸ்களில், 'ஆன்லைனில்' முன்பதிவு செய்யும் பயணியரில், மாதம்தோறும் மூவரை தேர்வு செய்து, தலா 10,000 ரூபாய் பரிசு அளிக்கும் திட்டத்தையும், அமைச்சர் நேற்று துவங்கி வைத்தார்.இத்திட்டம் இந்த மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.