உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிதி நிறுவன மோசடி விவகாரம் 2 மாதத்தில் 2 பேருக்கு குண்டாஸ்

நிதி நிறுவன மோசடி விவகாரம் 2 மாதத்தில் 2 பேருக்கு குண்டாஸ்

சென்னை:''நிதி நிறுவனங்கள் நடத்தி பண மோசடியில் ஈடுபடுவோரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யலாம் என, அனுமதி கிடைத்த, இரண்டு மாதங்களுக்குள் இருவர், அச்சட்டத்தில் கைதாகி உள்ளனர்'', என, பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு ஐ.ஜி., சந்தோஷ் குமார் கூறினார். மேலும், அவர் கூறியதாவது: போதைப் பொருள், கள்ளச்சாராயம் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும் நடைமுறை உள்ளது. கடந்த மாதம், நிதி நிறுவனங்கள் நடத்தி, பண மோசடியில் ஈடுபடுவோரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யலாம் என, பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே, விஜயரங்கபுரத்தைச் சேர்ந்தவர் கங்காதரன். இவர், மரக்கார் என்ற பிரியாணி கடையின் கிளை துவங்க அனுமதி தருவதாக, 'ட்ரோல் இந்தியா' என்ற நிதி நிறுவனம் வாயிலாக, தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த, 239 பேரிடம், 12 கோடி ரூபாய்க்கு மேல் பெற்று மோசடி செய்துள்ளார்; அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளோம். அதேபோல, திண்டுக்கல் மாவட்டம், பழனியில், ஸ்ரீநேசா என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்த செந்தில்குமார், 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். இவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளோம். அனுமதி வழங்கப்பட்ட இரண்டு மாதங்களில், இருவர் மீது இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ