உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாழடைந்த 25,000 தொகுப்பு வீடுகள் ரூ.600 கோடியில் மறுகட்டுமானம்

பாழடைந்த 25,000 தொகுப்பு வீடுகள் ரூ.600 கோடியில் மறுகட்டுமானம்

சென்னை:முதல்வரின் திட்டத்தின் கீழ், கிராமங்களில் பாழடைந்த, 25,000 தொகுப்பு வீடுகளை மறுகட்டுமானம் செய்வதற்கான பணிகள் துவங்கியுள்ளன.ஊரக வளர்ச்சி துறை வாயிலாக மாநில அரசு நிதியில், கலைஞர் கனவு இல்லம் திட்டம், மத்திய அரசு நிதியில், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களின் கீழ், குடிசை, ஓட்டு வீடுகளில் வசிப்பவர்களுக்கு, 'கான்கிரீட்' தளத்துடன் தொகுப்பு வீடுகள் தனித்தனியாக கட்டி தரப்படுகின்றன. இதேபோல, 2001ம் ஆண்டுக்கு முன்பு கட்டி தரப்பட்ட பல வீடுகள் பாழடைந்து இடியும் தருவாயில் உள்ளன. ஆபத்தான இந்த வீடுகளில் மக்கள் இன்றும் வசித்து வருகின்றனர். இந்த வீடுகளை புனரமைப்பதற்கு, 2024 - 25ம் ஆண்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. ஊரக வளர்ச்சி துறை வாயிலாக, இத்தகைய வீடுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் புனரமைக்க முடியாத அளவிற்கு பாழடைந்துள்ளன. இந்த வீடுகளை மறுகட்டுமானம் செய்ய வேண்டியுள்ளது. இதில், முதல் கட்டமாக, 25,000 வீடுகளை, 600 கோடி ரூபாயில் மறுகட்டுமானம் செய்ய முடிவு செய்யப்பட்டு, நடப்பாண்டு பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது இந்த திட்டத்திற்கு, முதல்வரின் வீடுகள் மறுகட்டுமான திட்டம் என, பெயரிடப்பட்டு உள்ளது. வீடுகள் மறுகட்டுமானத்திற்கு, 600 கோடி ரூபாய் வழங்க, நிதித் துறை ஒப்புதல் அளித்து அரசாணையும் பிறப்பித்துள்ளது. இதையடுத்து, வீடுகளை மறுகட்டுமானம் செய்வதற்கான பணிகளை ஊரக வளர்ச்சி துறை துவங்கியுள்ளது. ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கருணாநிதி, ஜெயலலிதா முதல்வராகவும், நரசிம்மராவ், தேவகவுடா, வாஜ்பாஜ், மன்மோகன் சிங் பிரதமராகவும் இருந்த காலக்கட்டங்களில், தமிழகத்தில் மத்திய, மாநில அரசு நிதியில், ஊரக பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட்டன. இவ்வாறு, தலா, 210 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்ட 1 லட்சம் வீடுகள் பாழடைந்துள்ளன. இவற்றை மறுகட்டுமானம் செய்ய, முதல்வரின் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தின் கீழ், வீடு ஒன்றுக்கு 2.40 லட்சம் ரூபாய் செலவிடப்படவுள்ளது. இதற்கான பயனாளிகள் தேர்வு நடந்து வருகிறது. விரைவில், 25.000 வீடுகளை இடித்து விட்டு கட்டுமான பணிகள் துவங்கப்படும். பாழடைந்த வீடுகளில் தொடர்ந்து வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ