சென்னை:நடப்பு நிதியாண்டில் இதுவரை, ரயில்களில் அபாய சங்கிலிகளை தவறாக பயன்படுத்தி இழுத்த, 2,618 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து, 15.45 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:தெற்கு ரயில்வேயில் தினமும், 1,303 விரைவு ரயில்களும், 640 குறுகிய துார பயணியர், மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் தினமும், 22 லட்சம் பேர் பயணம் செய்துவருகின்றனர். பாதுகாப்பு பிரச்னைகளை எதிர்கொள்ளும்போது, ரயில் ஓட்டுனர் மற்றும் பாதுகாவலரின் கவனத்தை ஈர்ப்பதற்காக, ரயில்களில் அபாய சங்கிலிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த அபாய சங்கிலியை தவறாக பயன்படுத்துவதால், ரயில்களின் இயக்க நேரம் பாதிக்கப்படுகிறது. ரயில் பெட்டிகளில் இருக்கும் அபாய சங்கிலிகளை தேவையில்லாமல் இழுக்க வேண்டாமென, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த விதி மீறல்களுக்கு ரயில்வே சட்டத்தின்படி, தண்டனை அதிகபட்சம் ஒரு ஆண்டு சிறை தண்டனையோ அல்லது 1,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். நடப்பு நிதியாண்டில் இதுவரை, தெற்கு ரயில்வேயில் அபாய சங்கிலி இழுத்தல் தொடர்பாக, 2,632 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 2,618 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடமிருந்து, 15 லட்சத்து, 45,165 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.