சென்னை: வாடிக்கையாளர்கள் செய்யும், 'ரீசார்ஜ்' தொகைக்கு அதிகமாக, மொபைல்போன் சில்லரை வியாபாரிகள், கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மொபைல்போன் வாடிக்கையாளர்களில், பெரும்பாலோர், பி.எஸ்.என்.எல்., மற்றும் தனியார் மொபைல்போன் சேவை நிறுவனங்களின், 'ப்ரீபெய்டு' சேவையை பயன்படுத்தி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் வசதிக்காக, 'ஈசி டாப்-அப்' என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வசதியை, மொபைல்போன் சேவை நிறுவனங்கள், தங்களின் சில்லரை வியாபாரிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தன. இதற்காக, சில்லரை வியாபாரிகளுக்கு, அந்தந்த சேவை நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக வழங்கியது. இந்நிலையில், சில்லரை வியாபாரிகளுக்கு வழங்கிய கமிஷன் தொகை, திடீரென குறைக்கப்பட்டதால், சில மாதங்களுக்கு முன், மொபைல்போன் சில்லரை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேவை நிறுவனங்களால் குறைக்கப்பட்ட, 'கமிஷன்' தொகை ஈடுகட்ட, மொபைல்போன், 'ரீசார்ஜ்'க்கான கட்டணத்திலிருந்து கூடுதலாக, 1 ரூபாயிலிருந்து, 5 ரூபாய் வரை, வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கின்றனர் என புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, சென்னை எழும்பூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் கூறும்போது,''கடந்த பத்தாண்டுகளாக, தனியார் மொபைல்போன் சேவை நிறுவனத்தின், 'ப்ரீபெய்டு' சேவையை பயன்படுத்துகிறேன். தேவைக்கு ஏற்ப, 'ரீசார்ஜ்' செய்வது வழக்கம். கடந்த சில நாட்களாக,'ரீசார்ஜ்' தொகைக்கு அதிகமாக, ஐந்து ரூபாய் வரை சில்லரை வியாபாரிகள் கேட்கின்றனர். கூடுதல் கட்டணம் குறித்து கேட்டால், மொபைல் நிறுவனத்தையே கேளுங்கள் என, அலட்சியமாக பேசுகின்றனர்,'' என்றார்.
இதுகுறித்து, சென்னை மயிலாப்பூர் பகுதி மொபைல்போன் சில்லரை வியாபாரியான சங்கர் கூறும்போது, ''துவக்கத்தில், 100 ரூபாய்க்கு, 7 ரூபாய் 50பைசா அளவிற்கு கமிஷன் கிடைத்தது. திடீரென, எவ்வித அறிவிப்பின்றி கமிஷன் தொகையை, 3 ரூபாய் அளவிற்கு மொபைல் நிறுவனங்கள் குறைத்தன. இந்த இழப்பை ஈடுகட்ட, போராடியும் பயனில்லை. அதனால், வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்களுக்கும், எங்களுக்கும் கருத்து வேறுபாடு நிலவுவது உண்மை தான். இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். வாடிக்கையாளர்கள், மொபைல் நிறுவனங்களை அணுக வேண்டும்,'' என்றார்.