சென்னை: 'தமிழகத்தில் டெல்டா மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை மாவட்டங்களில், கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை எதிர்கொள்ள, தயார் நிலையில் இருக்குமாறு, மாவட்ட நிர்வாகங்களுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான தயார் நிலை குறித்து, சென்னை அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை கலெக்டர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருடன், வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே ஆலோசனை நடத்தினார். அப்போது, அமைச்சர் பேசும்போது, ''நீர்த்தேக்கங்களில் உபரி நீர் இருந்தால், முன்கூட்டியே திறக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ''மாநிலம் முழுதும் உள்ள 122 பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையங்கள், 6,033 தற்காலிக நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.