சென்னை: பிரபல நடிகர் டெல்லி கணேஷ் (வயது 80) சென்னையில் அவரது இல்லத்தில் நேற்றிரவு 11 மணியளவில் காலமானார். அவர் உயிர் தூக்கத்தில் பிரிந்துள்ளது.பிரபல நடிகர் டில்லி கணேஷ் வயது மூப்பின் காரணமாக காலமானார். இவர், ஆகஸ்ட் 1ம் தேதி 1944ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தார். 1976ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பட்டினப்பிரவேசம் திரைப்படத்தில் அறிமுகமானார். இவர், கமல், ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sj5wu00y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக அரசின் கலைமாமணி விருதையும், பசி படத்திற்காக தமிழக அரசின் சிறப்பு விருதையும் பெற்றார். வெள்ளித்திரை மட்டுமல்லாது, சின்னதிரையிலும் தனது இயல்பான நடிப்பால் கோலோச்சிய டெல்லி கணேஷ், மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார். 1964- 1974ம் ஆண்டு வரை இந்திய விமானப்படையில் டில்லி கணேஷ் பணியாற்றி உள்ளார். குணச்சித்திரம், நகைச்சுவை உள்பட எல்லா கதாபாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெ ளிப்படுத்தியவர். நடிப்பு மட்டுமின்றி சிறந்த டப்பிங் கலைஞராகவும், திரைத்துறையில் பங்களித்தவர் டெல்லி கணேஷ். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.ராமபுரம் வீட்டில், பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு உள்ளது. டெல்லி கணேஷிற்கு மனைவி, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். மகன் மகா, ‛என்னுள் ஆயிரம்' படம் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து சக்ரா படத்தில் நடித்தார்.நாளை இறுதி சடங்கு
தந்தை மறைவு குறித்து அவரின் மகனும், நடிகருமான மகா நிருபர்களிடம் கூறியதாவது: 'அப்பாவுக்கு 80 வயதாகிறது. சமீபத்தில் தான் சதாபிஷேக விழா நடத்தினோம். நன்றாகத்தான் இருந்தார். வயது மூப்பு காரணமாக, உடல்நல பிரச்னை இருந்தது. நேற்று அக்கா உடன் நன்றாக அப்பா பேசிக் கொண்டு தான் இருந்தார். நேற்று இரவு மாத்திரை கொடுக்க அப்பாவை எழுப்ப சென்றோம். அப்போது அசைவின்றி இருந்தார். டாக்டர் வந்து பார்த்துவிட்டு, அவரது உயிர் பிரிந்து விட்டதாக கூறினார். இறுதிச்சடங்கு நாளை (நவ., 11) காலை 10 முதல் 11 மணிக்குள் நடக்கும். உறவினர்கள் வர வேண்டி உள்ளது' என்றார்.
பிரதமர் மோடி இரங்கல்
'புகழ்பெற்ற திரைப்பட ஆளுமை டெல்லி கணேஷின் மறைவு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியள்ளது. அசாத்திய நடிப்பு திறமையைக் கொண்டவர். அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களின் மூலம் பல தலைமுறைகள் கடந்தாலும் நினைவுகூரப்படுவார். டெல்லி கணேஷை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: மூத்த திரைக்கலைஞர் டெல்லி கணேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். வரலாற்றில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் பல கதாபாத்திரங்களில் நடித்த டெல்லி கணேஷ் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பாகும். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழக அரசு சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், டெல்லி கணேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். நடிகர் ரஜினி வெளியிட்ட அறிக்கையில், என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி எனக்கூறியுள்ளார்.