மேலும் செய்திகள்
ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்
6 minutes ago
பண்ணாரி அம்மன் கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கம்
19 minutes ago
பள்ளிகளுக்கு 22 அடி சாலை கட்டாயம்
22 minutes ago
மதுரை: மதுரையில் நடந்த தே.மு.தி.க., கூட்டத்திற்கு அழையா விருந்தாளியாக' சென்ற அ.தி.மு.க., சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமாரை, பிரேமலதா மதிக்காமல் உதாசீனப்படுத்தியதாக அ.தி.மு.க., நிர்வாகிகள் கொதிப்படைந்து உள்ளனர். மதுரையில் நேற்று முன்தினம் தே.மு.தி.க., பூத் முகவர் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா தலைமையில் நடந்தது. இதில் அழையா விருந்தாளியாக உதய குமார் சென்றார். கூட்டணி குறித்து பேசதான் வந்துள்ளார் என தே.மு.தி.க,வினர் கருதினர். இதை பிரேமலதாவிடமும் சொன்னார்கள். ஆனாலும், உதயகுமாரை ஒருமணி நேரம் காக்க வைத்ததுடன், பிரேமலதா தன் கட்சியுடன் கூட்டணி அமைக்க பெரிய கட்சிகள் அலை பாய்கின்றன என்ற அர்த்தத்தில் 'மக்கள் மனநிலை, கட்சியினரின் மன நிலையை ஆராய்ந்து கூட்டணியை தேர்வு செய்வோம். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார்கூட என்னை சந்திக்க வந்து காத்திருக்கிறார்' என கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்தார். நீண்ட நேரம் காத்திருப்புக்கு பின், மேடையில் இருந்த பிரேமலதாவை உதயகுமார் சந்தித்தார். உதயகுமாரின் இந்த நடவடிக்கை கட்சியினரிடமே கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, 'எங்கம்மா இறந்தபோது அவுங்க போனில துக்கம் கேட்டாங்க. அதனால், நேரில் நன்றி சொல்லப் போனேன்' என உதயகுமார் கூறியுள்ளார். அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: மற்றொரு கட்சியின் தலைவரை சந்திக்கப் போகும் முன், சொந்த கட்சியின் தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். எந்த ஊரில் சந்திப்பு நடக்கிறதோ, அந்த ஊரின் மாவட்டச்செயலரையும் கூட அழைத்துச் செல்ல வேண்டும். ஆனால் உதயகுமார் அதை செய்யவில்லை. பிரேமலதாவை தன்னிச்சையாக சந்தித்து உள்ளார். பிரேமலதாவை சந்திக்கும் முன், அவரிடம் முறைப்படி தகவல் தெரிவித்திருக்கலாம். திடீர் அழையா விருந்தாளியாக உதயகுமார் சென்றதாலேயே, இப்படியொரு சங்கடம். சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவரான அவரை, ஒருமணி நேரம் பிரேமலதா காக்க வைத்துள்ளார். கட்சிக் கூட்டத்தை ஐந்து நிமிடம் தள்ளி வைத்துவிட்டு, உதய குமாரை உடனே சந்தித்திருக்கலாம். அதை செய்யாமல், உதயகுமாரை காக்கவைத்ததோடு, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வைக்க அ.தி.மு.க., அலைகிறது என்ற தொனியில் கட்சி கூட்டத்தில் பிரேமலதா பேசி உள்ளார். உதயகுமாரின் இந்த செயலை, பழனிசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் யாரும் ரசிக்கவில்லை. தன்னிச்சையாக சென்று, அ.தி.மு.க.,வின் மதிப்பை குறைத்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
6 minutes ago
19 minutes ago
22 minutes ago