அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி முறையீடு
''தமிழகத்தில் முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் மற்றும் சட்டசபை, பார்லிமென்ட் உறுப்பினர்கள் பலருக்கும் எதிராக, ஏராளமான ஊழல் முறைகேடு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் பல ஆண்டுகளாக விசாரிக்கப்படாமல் உள்ளன. அதனால், அந்த வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும்,'' எனக் கோரி, கருப்பையா காந்தி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ''நீங்கள் குறிப்பிடும் இந்த வழக்குகளின் விசாரணை, அந்தந்த நீதிமன்றங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீங்கள் குறிப்பிடுவது போன்ற வழக்குகளின் விசாரணையில் கால தாமதம் என்பது, தமிழகத்தில் மட்டுமல்ல; பல மாநிலங்களிலும் உள்ளது. அது குறித்தெல்லாம் கேள்வி எழுப்பாமல், தமிழகத்தை மட்டும் குறிவைத்து கேள்வி எழுப்பி வாதாடுவது ஏன்?'' என கேட்டனர். பின், ''இந்த விவகாரத்தில் மனுதாரருக்கு இரண்டு வார காலம் அவகாசம் தரப்படுகிறது. நாங்கள் கேட்ட கேள்விக்கு, சிறு குறிப்பாக மட்டுமே பதில் அளிக்க வேண்டும். அதைப் படித்துப் பார்ப்போம். திருப்தி இல்லை என்றால், மனுவை தள்ளுபடி செய்வோம்,'' எனக் கூறி, வழக்கை இரண்டு வார காலத்துக்கு தள்ளி வைத்தனர். -நமது டில்லி நிருபர்-