| ADDED : மார் 06, 2024 11:26 PM
சென்னை:வேலுார் தொகுதியில் மீண்டும் போட்டியிட, அமைச்சரும், தி.மு.க., பொதுச்செயலருமான துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், நேற்று விருப்ப மனு அளித்தார். பின், நிருபர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:வெள்ளத்தின் போது, மக்களுக்கு உதவி செய்வதற்கு பதிலாக, தி.மு.க., அரசு துயரத்தை தான் ஏற்படுத்தி கொடுத்தது என்ற கருத்தை, பிரதமர் மோடி கூறியிருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியவர்களும், பொன்னும் பொருளும் கொடுத்தவர்களும், சேற்றில் நடந்தவர்களும் தான் அதுபற்றி பேச உரிமை உண்டு.வானத்தில் வந்து பறந்தும் கூட பார்க்காதவர்களுக்கு பேச, எந்த உரிமையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு சுமுகமாக நடந்து வருகிறது; சீக்கிரம் முடித்து விடுவோம். தி.மு.க., கூட்டணியில் இருக்கக் கூடிய கட்சிகளை, அ.தி.மு.க., கூட்டணிக்கு இழுப்பதற்கு பேச்சு நடக்கிறது என்ற தகவல் எப்படி இருக்கிறது என்றால், ஒரு படத்தில் வரும் வசனம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. 'கையை பிடித்து இழுத்தும் வராதவள், கண்ணடிச்சா மட்டும் வரப் போறாளா' என்ற வசனம் தான் அது. அந்த வசனம் மாதிரி யாரும் கண்ணடித்தாலும் வர மாட்டர்; கையை பிடித்து இழுத்தாலும் போக மாட்டர்.'கூட்டணியில் உள்ள கட்சிகளிடம், தி.மு.க., கெஞ்சி கொண்டு இருக்கிறது' என, முன்னாள் அமைச்சர் ஜெய்குமார் கூறியுள்ளார். அவர் எப்போதுமே அப்படித்தான் நகைச்சுவையாக பேசுவார்.இவ்வாறு அவர் கூறினார்.