சென்னை : தி.மு.க., துணை பொதுச்செயலர் ராஜா அளித்த பேட்டி:நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற தகுதியை மறந்து, அவதுாறுகளை அள்ளி வீசுவதும், மாற்று கட்சி ஆட்சி நடந்தால், ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை சொல்வதும் கூட்டாட்சி தத்துவத்திற்கு அழகல்ல. மாநில, மத்திய அரசுகளுக்கு இடையே இருக்கும் சுமுக உறவிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், அமித் ஷா பேசியுள்ளார். அவரது பேச்சை மக்கள் ஏற்க மாட்டார்கள். தி.மு.க., ஆட்சியில், 98.5 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், 10 சதவீத வாக்குறுதிகளை மட்டும் நிறைவேற்றியுள்ளதாக, அமித் ஷா தவறான தகவலை கூறியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றியது பற்றி நேருக்கு நேர் விவாதிக்க, அமித் ஷா தயாரா? அமித் ஷா, மோடி ஆகியோரை பார்த்து, எங்களுக்கு எந்த பயமும் இல்லை. திராவிட சித்தாந்தம் இருக்கும் வரை, பா.ஜ.,வால் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாது. நாங்கள் டில்லியோ, ஹரியானாவோ, மஹாராஷ்டிராவோ அல்ல; தமிழகம். தமிழகத்தில், பா.ஜ., கூட்டணி ஆட்சிதான் அமையும் என, அமித் ஷா கூறியுள்ளார். எப்படிப்பட்ட கூட்டணி அமைந்தாலும், அதை எதிர்கொள்ளும் திறன், முதல்வர் ஸ்டாலினுக்கு உண்டு.இவ்வாறு அவர் கூறினார்.